பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இம்மாதம் 26ம் தேதி வரை நடக்கிறது. மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். இதுவரை 46 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மெளனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
இன்று மகி பவுர்ணமி என்பதால் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நாளில் புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும். இதையொட்டி கடந்த சில நாள்களாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வந்து குவிந்துள்ளனர். பிரயாக்ராஜ் நோக்கிய பல நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
மத்திய பிரதேச நெடுஞ்சாலையில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் நகர பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மகா கும்பமேளாவில் இதுவரை 46.25 மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகி பவுர்ணமி என்பதால், இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post உ.பி. மகா கும்பமேளாவில் இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல் appeared first on Dinakaran.