லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் உள்ள வந்தியா குர்த் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அஹில்கர் (வயது 45). நேற்று இரவு தனது மகனுக்கு உணவு வழங்க வயலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, கிராம வாசிகள் சிலர் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் கைகலப்பானதுடன் அவர்கள் அஹில்கரை கட்டைகளை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் அஹில்கர் படுகாயங்களுடன் பரித்பூர் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் பரேலி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பழைய நிலத் தகராறில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.