கோவை: ஈஷா பெண் துறவிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று (18/10/2024) தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அந்த இரு பெண் துறவிகளும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் ‘இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது’ என்றும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் முதலில் பேசியுள்ள மா மதி கூறுகையில்,”அனைவருக்கும் வணக்கம். இந்தியாவின் உச்சநீதிமன்றத்திற்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற மிகவும் தகுந்த தீரப்பினை வழங்கி உள்ளார்கள். எங்களுடைய பாதையில் இருப்பதற்கு மிகவும் ஆதரவாக இந்த தீர்ப்பு இருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் இருந்து, நாங்கள் எங்களின் சொந்த விருப்பத்தில் தான் இங்கு இருக்கிறோமா? அல்லது பிறரின் வற்புறுத்தலின் பேரில் இங்கு இருக்கிறோமா? என்று ஊடகங்கள் மற்றும் பலர் தற்போது வரை, இந்த சூழ்நிலையை மிகவும் பெரிதுபடுத்தி திரித்து, திரித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் விருப்பப்பட்டு தான் இந்த முடிவை தேர்ந்தெடுத்தோம். யாருடைய கட்டாயத்தின் பெயரிலோ அல்லது வற்புறுத்தலின் பெயரிலோ நாங்கள் இங்கு வரவில்லை. இந்த முடிவை உண்மையிலேயே நாங்கள் இந்தப் பாதையில் இருக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இருந்த ஆசையினால் எடுத்தோம்.” எனக் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் மற்றொரு பெண் துறவியான மா மாயு அவர்கள் கூறுகையில், “ நான் ஈஷா யோகா மையத்திற்கு தன்னார்வலராக வந்தது யார் சொல்லியும் இல்லை. நான் 2009-இல் இங்கு முழுநேர தன்னார்வதொண்டராக வந்து, 2011-இல் பிரம்மச்சரிய பாதையை தேர்ந்தெடுத்தேன். நான் இங்கு முழு நேரமாக வந்து ஏழு வருடத்திற்கு பிறகு, துரதிருஷ்டவசமாக பல ஊடக விசாரணைகளை சந்திக்க வேண்டி இருந்தது. மீண்டும், மீண்டும் அதே கேள்விகளுக்கு பதில்கள், வேதனையான விஷயங்கள் என எல்லாவற்றையும் பார்க்க வேண்டி இருந்தது.
இந்த எல்லா கஷ்டங்களிலும், ஒரு சமூகமாக இங்கு எங்களுடன் இருந்த மக்கள் கொடுத்த தெம்பு வார்த்தைகளினால் விளக்க முடியாது. பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இருக்கிறதா என்றுக் கேட்டால், இதை விட பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு நீங்கள் வந்தால், நீங்கள் ஆணா அல்லது பெண்ணா என்று கூட, இங்கு இருப்பவர்களுக்கு சிந்தனை இருக்காது. பெண்ணை ஒரு உயிராக பார்ப்பதை விட பெரிய மரியாதை இருக்க முடியாது.
இங்கே துறவிகளாக இருப்பது 215 பேர் தான், திருமணம் செய்து கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இங்கு இருக்கின்றவர்களில் திருமணம் வேண்டும் என்கிறவர்களுக்கு திருமணம். துறவரம் வேண்டும் என்கிறவர்களுக்கு துறவரம். இதற்கு சத்குருவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் ‘பெண் துறவிகள் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் தங்கி இருக்கின்றனர். அதனால் ஈஷாவிற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக குறிப்பிட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி, ‘ஒரு அமைப்பை இழிவுபடுத்துவதற்காக இது போன்ற மனுக்களை பயன்படுத்தக் கூடாது’ என்று கூறியது குறிப்பிடதக்கது.
The post ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது: ஈஷா பெண் துறவிகள் appeared first on Dinakaran.