கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மஹா சிவராத்திரி விழா குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.
ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கலந்து கொண்டு பேசியதாவது:
ஈஷாவில் 31வது மஹா சிவராத்திரி விழா வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்க உள்ளனர். ஆதியோகி சிலை முன்பு 26ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.
சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனங்கள், சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. இதனுடன் ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ என்ற இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார்.
மஹா சிவராத்திரி விழாவிற்கு நேரில் வரும் மக்களின் வசதிக்காக தேவையான பார்கிங், சுத்திகரிக்கப்பட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், உடனடி மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முன் பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த மஹா சிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உடன் ஈஷா தன்னார்வலர் கணேஷ் ரவீந்தரன் மற்றும் சரவணன் ஆகியோர் இருந்தனர்.
The post ஈஷாவில் பிப்.26ல் மஹா சிவராத்திரி விழா; உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு appeared first on Dinakaran.