கோவை: ஈஷா யோகா மையம் குறித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கோவை ஈஷா அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.
ஈஷா அறக்கட்டளை இன்று (அக்.01) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஈஷா யோகா மையம் யாரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ, துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை. இம்மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சாரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. இந்நிலையில், 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். பிரம்மச்சாரிய பாதையில் இருக்கும் தனது மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர்களின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.