ஈஷா யோகா மைய வழக்கு: புது கட்டுமானத்திற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும்.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

4 hours ago 2

புதுடெல்லி: ஈஷா யோக மையத்திற்கு பிறப்பிக்கப்பட்ட சோகாஷ் நோட்டீசை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன், ‘இந்த விவகாரத்தில் 600 நாட்களுக்கு பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனால் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்யவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் காப்புக்காடு அருகில் இருக்கும் ஈஷா யோகா மையத்தின் கட்டுமான விதி மீறலை கண்டும் காணாமல் இருக்க முடியாது. எனவே தான் மேல்முறையீட்டு மனுவை நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.

இருப்பினும் சட்ட விதிகளுக்கு எதிராக இருக்கும் கட்டங்களை இடிப்பது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்பப்போவது இல்லை. முதலில் முறையாக ஆய்வு செய்யப்படும். ஏனெனில் தவறு செய்யும் எவருக்கும் சலுகை காட்டக் கூடாது என்பதே அரசின் கொள்கையாகும்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமானவர்கள் ஆவர். எனவே எந்த விதி மீறலுக்கும் சலுகை அளிக்க முடியாது. சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உரிய கருத்துகளை தெரிவித்துள்ளது. அதில் நாங்கள் தலையிட வேண்டியது இல்லை. ஈஷா யோகா மையம் வரும் காலத்தில் எந்த கட்டுமானம் கட்டினாலும், முன்கூட்டியே மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post ஈஷா யோகா மைய வழக்கு: புது கட்டுமானத்திற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும்.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article