ஈஷா யோக மையம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை: ஈஷா அறக்கட்டளை

3 months ago 20


கோவை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோக மையம் தொடர்பாக நடைப்பெற்று வரும் வழக்கில் மனுதாரரால் எழுப்பபட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஈஷா யோக மையம் எவரையும் திருமணமோ அல்லது துறவறமோ மேற்கொள்ள வற்புறுத்துவதில்லை என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘ஈஷா அறக்கட்டளை சத்குரு அவர்களால் யோகா மற்றும் ஆன்மீகத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அவரவர் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், ஞானத்தையும் வழங்கி உள்ளது. ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை.

ஏனெனில் இவை அனைத்தும் தனிமனித சுதந்திரம் மற்றும் விருப்பம், இதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என உறுதியாக நம்புகிறோம். ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்கையில் 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் தனது மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி அவர்களின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு பிரம்மசாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். அது மட்டுமில்லாமல் மிக சமீபத்தில் காமராஜ் ஈஷா யோக மையம் சென்று தன்னுடைய மகள்களை சந்தித்த CCTV காட்சிகளும் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தேவையான அனைத்து ஆதாரங்களையும் வழங்கி உள்ளதால் உறுதியாக உண்மை வெல்லும் என்று நம்புகிறோம்.

மேலும் இதுவரை போலியாக உருவாக்கப்பட்ட அனைத்து தேவையற்ற சர்ச்சைகளும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் 2016-ஆம் ஆண்டு இதே காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தீர விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி கோவை மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று கோவை ஈஷா யோகா மையத்தில் மா மதி மற்றும் மா மாயு ஆகிய இருவரையும் சந்தித்து நீதி விசாரணை நடத்தியது. அவர்களின் அறிக்கையின் படி தீர்ப்பு அளிக்கப்பட்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் “பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை, பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்களது சுயவிருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்,” என்று கூறியுள்ளார்கள் என்பதை தற்போது நினைவுக் கூற விரும்புகிறோம்.

முன்னதாக, காமராஜ் ஈஷாவிற்கு எதிராக செயல்படும் பிற உதிரி அமைப்புகள் மற்றும் நபர்களுடன் சேர்ந்து, ஈஷா அறக்கட்டளையால் சுற்றுப்புற கிராம மற்றும் பழங்குடியின மக்களின் நன்மைக்காக கட்டப்பட்டு வரும் தகன மேடை குறித்து தொடர் பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் அரசு அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் தான்தோன்றித் தனமாக உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் குழுவாக ஈஷா வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்று காவல்துறையால் தடுக்கப்பட்டனர்.

பின்னர் எவ்வித முகாந்திரமும் இன்றி ஈஷா தன்னார்வலர்கள் மீது கிரிமினல் புகாரும் அளித்தனர். இது தொடர்பான வழக்கில் காவல்துறையின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தவிர, மனுதாரர் பொய்யாக குறிப்பிட்டதை போன்று அறக்கட்டளைக்கு எதிராக வேறு எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை. ஆகவே ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

The post ஈஷா யோக மையம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை: ஈஷா அறக்கட்டளை appeared first on Dinakaran.

Read Entire Article