ஈஷா உலகம் முழுவதிலும் இருந்து ஆன்மீகத் தேடலுடன் வரும் அனைவருக்கும் பாதுகாப்பான இடம்: அறிக்கை வெளியீடு

4 weeks ago 7

கோவை: ஈஷா உலகம் முழுவதிலும் இருந்து ஆன்மீகத் தேடலுடன் வரும் அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறியதாவது; ஈஷாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை சமர்ப்பித்த நிலை அறிக்கையில், இரண்டு பெண் துறவிகளும் அவர்களின் சுயவிருப்பத்தின் பேரிலேயே ஈஷாவில் வசித்து வருகிறார்கள் என்பதையும், அவர்கள் விரும்பும் போது வெளியில் செல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த 2 துறவிகளில் ஒருவர் சமீபத்தில் நடைப்பெற்ற 10-கிமீ மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டதைப் பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு நெறிமுறைகள்

ஈஷா அறக்கட்டளையில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு (POSH) செயல்பட்டு வருகிறது. மேலும் அதற்குரிய நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறோம். இந்நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் ‘உள் புகார்கள் குழுவில்’ (Internal Complaints Committee) சில மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்களை சுட்டிக்காட்டியதால், அந்த அம்சங்கள் குறித்து அவர்களின் பரிந்துரைகளின் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அது குறித்தான தகவல்கள் சமந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

காணாமல் போனவர்கள்

ஈஷாவில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 6 பேரில் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காவல்துறையின் அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது. மேலும் காணாமல் போன ஒருவர் குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்த பிறகு, காவல்துறையில் முறையாக புகார் அளிக்கப்பட்டது. அந்த நபர் பாதுகாப்பாக திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் காணாமல் போன நபரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்த வழக்கில் கேள்விக்கு உள்ளாக்கபடும் மருத்துவர் ஈஷா அவுட்ரீச்சின் கீழ் பணிபுரிந்து வந்தார். மேலும் அந்த சம்பவம் ஈஷா யோக மைய வளாகத்திற்கு வெளியே நடந்துள்ளது. அந்த வழக்கின் விசாரணை தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

மயானம்

ஈஷா மைய வளாகத்திற்குள் மயானங்கள் எதுவும் செயல்படவில்லை.

நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் ஈஷா

ஈஷா அறக்கட்டளை இந்த நிலத்தின் சட்டங்களை முழுமையாக பின்பற்றும் அமைப்பாக இருப்பதால், அனைத்து சட்ட நெறிமுறைகளையும் நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஈஷாவில் இரண்டு நாட்கள் நடைப்பெற்ற விசாரணையின் போது, தியான அன்பர்கள் மற்றும் சாதகர்களின் வழக்கமான ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இடையூறு ஏற்பட்ட போதிலும், காவல்துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்ததற்காக அவர்களுக்கு எங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். சத்குரு அவர்களால் வழங்கப்படும் சக்திவாய்ந்த யோகக் கருவிகள் மூலம் மனித குலத்தின் நல்வாழ்வுக்காக செயல்பட ஈஷா அறக்கட்டளை உறுதி கொண்டுள்ளது மற்றும் யோகாவின் அளப்பரிய சக்தியை அனுபவிக்க உலகெங்கிலும் உள்ள மக்களை ஈஷா வரவேற்கிறது.

The post ஈஷா உலகம் முழுவதிலும் இருந்து ஆன்மீகத் தேடலுடன் வரும் அனைவருக்கும் பாதுகாப்பான இடம்: அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article