ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிரான உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து மனிதநேயத்திற்கு எதிரானது : வைகோ

6 hours ago 3

சென்னை : ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிரான உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து மனிதநேயத்திற்கு எதிரானது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக எம்.பி.வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

“ஈழத்தமிழரான சுபாஷ்கரன் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, இராமநாதபுரம் நீதிமன்றம் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றம் இவர் தண்டனையை ஏழாண்டு காலமாக 2022 ஆம் ஆண்டில் குறைத்தது.இவரது தண்டனை காலம் இந்த ஆண்டுடன் முடிவதை முன்னிட்டு, தண்டனை காலம் முடிந்தவுடன் இந்தியாவிலேயே தங்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் முறையிட்டபோது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளான திபங்கர் தத்தா மற்றும் வினோத்சந்திரன் அமர்வு “உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல, இந்தியாவில் தொடர்ந்து தங்கும் உரிமை உங்களுக்கு இல்லை, இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால் வேறு நாட்டுக்குச் சென்று புகலிடம் கோருங்கள்” என்று தெரிவித்துள்ள கருத்து கவலைக்கு உரியதாகும்.

தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலரை இந்திய அரசு, இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டபோது, இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், “இலங்கை தமிழ் அகதிகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் திருப்பி அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பது ஏற்கத்தக்கது அல்ல. திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது” என ஆணை பிறப்பித்தது. இதன் விளைவாக ஈழத்தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாத வார்த்தைகள். நீதிபதிகள் இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்துமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிரான உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து மனிதநேயத்திற்கு எதிரானது : வைகோ appeared first on Dinakaran.

Read Entire Article