ஈரோட்டில் வரவேற்பை பெற்று வரும் இயற்கை சந்தை: உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனைக்கு மக்கள் வரவேற்பு

5 hours ago 3

ஈரோடு: ஈரோட்டில் மகளிர் சுயஉதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக சந்தை படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இயற்கை சந்தை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஈரோட்டில் மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயற்கை சந்தைகள் அமைக்கப்பட்டன. இத்திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து மாவட்ட அளவில் இயற்கை சந்தையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு ஈரோடு பேருந்து நிலையத்தில் இரண்டு நாள் இயற்கை சந்தை தொடங்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 70க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் கடைகளை அமைத்துள்ளனர். இயற்கை சந்தையில் ரசாயன கலப்பின்றி விளைவிக்கப்பட்ட காய்கறிகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அழகுசாதன பொருட்கள், பருத்தி ஆடைகள், கைப்பைகள், மூலிகை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மலை கிராமங்களை சேர்ந்த பழங்குடியின பெண்களும் பல வித இயற்கை பொருட்களை சந்தைப்படுத்தி இருந்தனர். பேருந்து நிலையத்திற்கு வந்த மக்களும் இயற்கை சந்தையை பார்வையிட்டு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இடைத்தரகர்கள் இன்றி வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் தங்களுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதாக மகளிர்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மக்களின் வரவேற்பை பெற்று வருவதால் இயற்கை சந்தை திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

The post ஈரோட்டில் வரவேற்பை பெற்று வரும் இயற்கை சந்தை: உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனைக்கு மக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article