ஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, மக்கள் நலப்பணிகளை கள ஆய்வு செய்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று, மக்கள் நலப்பணிகளை கள ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, 2 நாட்கள் சுற்றுப்பயணமாக அவர் ஈரோடு மாவட்டத்திற்கு நாளை (19ம் தேதி) செல்கிறார். இதற்காக நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோட்டிற்கு மதியம் சுமார் 1 மணியளவில் செல்கிறார். பின்னர், ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து, ஈரோடு மேட்டுக்கடை தங்கம் மகாலில் நடக்கும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்.
மாலை 6 மணிக்கு ஈரோடு பெருந்துறை சாலையில் முத்து மகாலில் நடக்கும் முன்னாள் எம்எல்ஏ சந்திரக்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். இரவு 7 மணிக்கு முதல் நாள் நிகழ்ச்சியை நிறைவு செய்து, காலிங்கராயன் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் (20ம் தேதி) காலை 10 மணிக்கு ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். விழாவில், மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கியும் வைக்கிறார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 50,088 பேருக்கு சுமார் ரூ.284 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, பேருரையாற்றுகிறார்.
The post ஈரோட்டில் கள ஆய்வு முதல்வர் நாளை பயணம்: ரூ.284 கோடியில் 50,088 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் appeared first on Dinakaran.