ஈரோடு: சிவகிரி அருகே விளக்கேத்தி மேக்கரையான் தோட்டத்தில் ராமசாமி-பாக்கியம் தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 1ம் தேதி தம்பதியை மர்மநபர்கள் கொலை செய்து பத்தரை சவரன் நகையை திருடிச் சென்றனர். இந்த முதிய தம்பதி கொலை வழக்கில் அரச்சலூரைச் சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ், ஞானசேகரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த நவ.28ல் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்பாளையத்தில் தெய்வசிகாமணி, மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோரை கொலை செய்து ஐந்தரை சவரன் நகை, செல்போனை கொள்ளையடித்தனர். இந்த இரண்டு சம்பவமும் செய்ததும் இவர்கள் தான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கு தொடர்பாக ஐ.ஜி. செந்தில்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது; தம்பதியை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். போலீசிடம் சிக்காமல் இருக்க கையுறையை பயன்படுத்தி தம்பதியை கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் செல்போன் கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்லடம் மூவர் கொலை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடித்த நகையை உருக்கி விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.
சென்னிமலைபாளையத்தில் உள்ள ஞானசேகரனிடம் தங்கத்தை ஆச்சியப்பன் கொடுத்து விற்பனை செய்ய முயன்றார். திருட்டு நகையை உருக்கிக் கொடுத்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆச்சியப்பன் வீட்டில் உருக்கி வைக்கப்பட்டிருந்த 82 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும். கைதான மூவர் மீதும் 2015ம் ஆண்டில் 5 வழக்குகள் ஏற்கெனவே உள்ளன. ஈரோடு முதிய தம்பதியை கொன்ற கொலையாளிகள்தான் பல்லடத்திலும் 3 பேரை கொன்றனர். பல்லடத்தில் 3 பேரை கொலை செய்ததை 4 பேரும் ஒப்புக்கொண்டனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ஈரோடு முதிய தம்பதியை கொன்ற கொலையாளிகள்தான் பல்லடத்திலும் 3 பேரை கொன்றனர்: ஐ.ஜி. செந்தில்குமார் பேட்டி appeared first on Dinakaran.