ஈரோடு ஜவுளிச்சந்தையில் கோடைகால ஜவுளி விற்பனை அதிகரிப்பு

15 hours ago 1

ஈரோடு : ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டிவிஎஸ் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தா வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.

தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்நிலையில், இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை நடைபெற்றது.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், காட்டன் ரக துணிகள் மற்றும் புதிய ஜவுளி ரகங்கள் நேற்று அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளி கொள்முதல் செய்ய வந்திருந்தனர்.

இந்த வார சந்தையில் கோடை வெயிலுக்கு ஏற்ற காட்டன் ஜவுளி ரகங்கள் அதிக அளவில் விற்பனையாகின.குறிப்பாக கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு வந்து செல்பவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை ஆகியவற்றால் இந்த வார ஜவுளிச் சந்தையில் சில்லரை விற்பனை அதிக அளவில் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஈரோடு ஜவுளிச்சந்தையில் கோடைகால ஜவுளி விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article