ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிப்பயணம் 2026 தேர்தலிலும் தொடரும் வகையில் திமுக அரசு செயல்பாடுகள் அமையும்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

3 months ago 7

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி பயணம் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமையும் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 6, 7 தேதிகளில் அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளுக்காகவும், திமுக நிர்வாகிகள்-உடன்பிறப்புகளின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் நெல்லை மாவட்டத்திற்கு மேற்கொண்ட பயணம் எல்லையில்லா மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா பவர் குழுமத்தின் சேலார் நிறுவனத்தைத் தொடங்கி வைத்ததன் மூலம், சூரிய ஒளி மின்கல உற்பத்தித் துறையில் தமிழ்நாடு புதிய பாய்ச்சலை மேற்கொள்ளவிருப்பதுடன், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 4000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் அமையும் நல்ல சூழலும் உருவாகியுள்ளது. பிப்ரவரி 8ம் நாள் காலை முதலே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலிருந்து இனிப்பான வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்தது. திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டே இருந்தார்.

மக்களுக்கு தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இது என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அமைச்சர் முத்துசாமி தலைமையிலான திமுக நிர்வாகிகள் செயல்வீரர்கள்-உடன்பிறப்புகள் அனைவருக்கும், தோழமைக் கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும், திமுகவின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமாருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், ‘வெல்வோம் இருநூறு-படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்தை உங்களில் ஒருவனான நான் முன்வைத்தேன். ‘இருநூறு இலக்கு’ என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பாஜ அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, நேற்றைய முன்திம்(பிப்.8) மாநிலம் முழுவதும் திமுகவின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன.

ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் கெடுக்கும் வகையிலும் ஒன்றிய பாஜ அரசு தன் வஞ்சகப் போக்கை தொடர்ந்து மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டினேன். வஞ்சிப்பது பாஜ அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது திமுகவின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும்.

மாநில உரிமைக்கான துணிச்சலான குரல் தொடர்ந்து ஒலிக்கும். சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் திமுக முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது. இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும்.

அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிப்பயணம் 2026 தேர்தலிலும் தொடரும் வகையில் திமுக அரசு செயல்பாடுகள் அமையும்: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article