ஈரோடு,
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ள உகினியத்தை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது 49). விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்கு காவலுக்கு ராஜப்பன் சென்று உள்ளார். அப்போது அங்கு புதருக்குள் மறைந்து இருந்த காட்டு யானை திடீரென ராஜப்பனை நோக்கி வேகமாக ஓடி வந்தது.
யானையை கண்டதும், அதனிடம் இருந்து ராஜப்பன் தப்பிக்க முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை துதிக்கையால் தாக்கியதுடன், தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இந்த காட்சியை கண்டதும் அருகில் உள்ள தோட்டத்தை சேர்ந்த விவசாயிகளான ஆறுமுகம், ஜடைசாமி, மாரன் ஆகியோர் சத்தம் போட்டு காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் அங்கிருந்து பிளிறியபடியே காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜப்பனை மீட்டு பசுவனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜப்பன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.