ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். அதைபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் ஓட்டுவேட்டையாடி வருகிறார். இதற்கிடையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலையில் பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர் சீதாலட்சுமி தனது கட்சியினருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர்கள் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாதக வேட்பாளர் மீது இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.