ஈரோடு இடைத்தேர்தல்: தபால் வாக்குப்பதிவு நிறைவு

1 week ago 5

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவு என்கிற இலக்குடன் தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன்படி தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு வர முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் முன்கூட்டியே தபால் வாக்குகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி '12 டி' படிவத்துடன் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2 ஆயிரத்து 529 பேரில் 209 பேரும், மாற்றுத்திறனாளிகள் 1,570 பேரில் 47 பேரும் என 256 பேர் தபால் வாக்களிக்க ஒப்புதல் அளித்திருந்தனர். அதன்படி அவர்களிடம் வீடு வீடாக சென்று ஓட்டுகளை பெற முடிவு செய்யப்பட்டது.

கடந்த 23-ந் தேதி தொடங்கிய இந்த வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. முதல் நாளில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90 பேரும், மாற்றுத்திறனாளிகள் 26 பேரும் என 116 பேர் வாக்களித்து இருந்தனர். 85 வயது முதல் 95 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை உள்ளவர்கள் வீடுகளில் இருந்து கொண்டே தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். 4 நாட்கள் நடந்த இந்த தபால் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 256 பேரில் 3 பேர் சமீபத்தில் மரணம் அடைந்து விட்டனர். 7 பேர் குறிப்பிட்ட முகவரியில் இல்லை.

எனவே இந்த 10 பேரை தவிர்த்து 246 வாக்குகளை தபால் வாக்குகளாக அதிகாரிகள் பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் ஓட்டுப்பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை அன்று தபால் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Entire Article