ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி (அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது மனைவி, மகன், மகளுடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், " ஈரோடு இடைத்தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றி பெறும். திராவிட மாடல் அரசின் 4ம் ஆண்டு சாதனைகளே திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கும். மக்கள் அனைவரும் உங்களுடைய வாக்கினை செலுத்த வேண்டும்" என்று கூறினார்.