ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. தி.மு.க. வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 46 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் பதிவு செய்யப்படும். 27-ந் தேதி வரை தபால் வாக்களிப்பு நடைபெறுகிறது.
வாக்குச் சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு படிவங்கள் வழங்கப்படும்; அந்தப் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கையெழுத்து/ கைரேகை பெறப்படும். பின்னர் ரகசியமாக வாக்குச் சீட்டில் வாக்குச் செலுத்த அனுமதிக்கப்படுவர். உடல்நிலை பாதிக்கப்பட்டு வாக்களிக்க இயலாதவர் எனில் அவரது சார்பில் கட்சி சார்பற்ற ஒரு பிரதிநிதி வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.