சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மதுரையிலிருந்து சென்னை வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணையம், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தை அளித்து, பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக கொடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் காங்கிரஸ் அந்த வாய்ப்பை, திமுகவுக்கு வழங்கி உள்ளது. இது பாராட்டத்தக்கது. காங்கிரஸ் -திமுக இடையே உள்ள நட்புறவு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. திமுக வேட்பாளர் மிகப் பெரிய பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
திமுக வேட்பாளர் வெற்றிக்கு விடுதலை சிறுத்தை கட்சி பணியாற்றும். பெரியார் மீது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற விதத்தில், விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது இல்லை. இந்த போக்கை சீமான் தவிர்ப்பது, அவருடைய எதிர்காலத்துக்கும், அவருடைய அரசியலுக்கும் நல்லது. சனாதன சக்திகள் கடந்த 10 ஆண்டுகளாக, பெரியார் என்ற பிம்பத்தை உடைத்து நொறுக்குவதற்கு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு வலு சேர்க்கும் முறையில், சீமான் போக்கு இருக்கிறது. அதுவும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதை சீமான் கைவிட வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு கொடுத்தது காங்கிரஸ்-திமுகவின் நட்புறவுக்கு சான்று: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.