
சென்னை,
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 498 மீனவர்களும், நெல்லை மாவட்டத்தில் இருந்து 78 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 72 மீனவர்களும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 3 மீனவர்களும், ஆக மொத்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிக்கிறார்கள்.
அங்கு அதிகரித்து வரும் போர்ச் சூழல் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, தமிழ்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் உள்ளனர் எனவும் அவர்களை பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கும் தேவையான தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் கடிதனம் எழுதினார்.
இந்த நிலையில் ஈரானில் சிக்கியிருக்கு மீணவர்களை மீட்க ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை மதுரைகிளை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டு அழைத்துவர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரைக்கிளை உயர்நீதிமன்ற தள்ளுபடி செய்தது. மேலும் ஈரானில் இருக்கும் மீனவர்கள் அங்கிருக்கும் தூதரகத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு தெரிவித்தது.