ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

1 week ago 2

சென்னை: ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். போர்ச் சூழலினால் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களின் நிலை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்தை ஈர்த்துள்ள தமிழ்நாடு முதல்வர், ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

குமரி மாவட்டத்திலிருந்து 498 மீனவர்களும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 78 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 72 மீனவர்களும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 3 மீனவர்களும், மொத்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் ஈரானில் சிக்கித் தவிக்கிறார்கள். மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப அரசின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த விஷயத்தில், ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் விரைவான தலையீடு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலைத் தரும், ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்தவும், அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கும் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article