ஈசநத்தம் பகுதிகளில் பயிரிட்டுள்ள பணப்பயிரான மாதுளையை சேதப்படுத்தும் மயில்கள்

3 weeks ago 5

அரவக்குறிச்சி, அக்.21: அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசந்தம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மாதுளை உள்ளிட்ட பணப்பயிர்களை, கூட்டம் கூட்டமாக வரும் மயில்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வருவாய் இழந்து கஷ்டப்படும் நிலை உள்ளது.

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் ஈசந்தம், புதூர், பெரிய மஞ்சுவளி உள்ளிட்ட ஊராட்சிகளில் ஏராளமான கிராமங்களில் விவசாயிகள் மாதுளை பயிரிட்டுள்ளனர். தற்போது மாதுளை காய்த்து பழங்களை அறுவடை செய்யும் நேரமாகும். இந்நிலையில் தங்களது தோட்டக்களில் காய்த்துள்ள மாதுளம் பழங்களை காப்பாற்றுவதில் பெரும் சவலாக இருப்பது, அங்கு ஏராளமாக உள்ள மயில்கள் ஆகும். கூட்டமாக வரும் மயில்கள் மாதுளம் பழங்களை கொத்தி சேதப்படுத்துவதால் ஏராளமான பழங்கள் தரையில் உதிர்ந்து வீணாகின்றன. இதனால் மாதுளை பயிரிடும் விவசாயிகள் வருவாய் இழந்து கஷ்டப்படும் நிலை உள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் மயில்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் மயில்கள் பழங்களை கொத்தி சேதப்படுத்துவதால், பழங்கள் தரையில் விழுந்து விற்க முடியாமல் வீணாகின்றன. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றது. மாதுளை மட்டுமல்லாமல், விவசாயிகள் பயரிட்டுள்ள முருங்கை மரத்தில் மயில்கள் வேகமாக வந்து அமர்வதால் முருங்கை மர கிளைகள் ஓடிந்து வீணாகின்றன.

இதேபோல கொய்யா தோப்புகளிலும் மயில்கள் கூட்டமாக வந்து கொய்யாப் பழங்களை சேதப்படுத்துகின்றன. இந்நிலை நீடித்தால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. மயில்களை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்தை எடுக்க வேண்டும் என்று கவலையுடன் கூறினர்.

The post ஈசநத்தம் பகுதிகளில் பயிரிட்டுள்ள பணப்பயிரான மாதுளையை சேதப்படுத்தும் மயில்கள் appeared first on Dinakaran.

Read Entire Article