தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு ஆபாச நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைப்பு

1 hour ago 1

* தயாரிப்பாளரின் பண்ணை வீட்டில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியவரை காட்டிக் கொடுத்தது ‘சென்ட் வாசனை’

* மதுரை, கோவை வழக்குகளிலும் அடுத்தடுத்து கைதாகிறார்

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த ஆபாச நடிகை கஸ்தூரி, ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி ரகுபதி ராஜா உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நடிகை கஸ்தூரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மதுரை மற்றும் கோவை போலீசார் அடுத்தடுத்து வழக்குகளில் கஸ்தூரியை கைது செய்து விசாரணை நடத்த தயாராகி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சமூகப் பாதுகாப்பு கோரி பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு 18 நிமிடங்கள் பேசினார். அப்போது தெலுங்கு சமுதாய பெண்கள் குறித்து அவதூறாக பேசி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் படி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192, 196(1),(ஏ), 353(1)(பி) மற்றும் 353(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் போலீசாரின் கைதுக்கு பயந்து நடிகை கஸ்தூரி தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதேநேரம் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நியைத்தில் அளித்த புகாரின்படி, நடிகை கஸ்தூரி மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதேபோல் கோவை மாநகர காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீதும் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நடிகை கஸ்தூரி எந்த நேரத்திலும் போலீசார் தம்மை கைது செய்யலாம் என கருதி முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி எழும்பூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் பெண் போலீசார் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் கடந்த ஒருவாரமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பஞ்சகுட்டா என்ற இடத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலகிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கஸ்தூரி பதுங்கி இருப்பதை தனிப்படையினர் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து தனிப்படையினர் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் முகாமிட்டு தயாரிப்பாளர் பாலகிருஷ்ணாவின் பண்ணை வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கஸ்தூரி, போலீசார் வருவதை அறிந்து, பண்ணை வீட்டில் ரகசிய அறை ஒன்றில் பதுங்கியதாக கூறப்படுகிறது. தனிப்படையினர் பண்ணை வீடு முழுவதும் தேடியும் கஸ்தூரி கிடைக்கவில்லை. அதேநேரம், பண்ணை வீட்டில் உள்ள ரகசிய அறையை திறந்து சோதனை செய்த போது, அங்கும் கஸ்தூரி இல்லை எனத் தெரிந்து திடுக்கிட்டனர்.

இதையடுத்து பெண் போலீஸ் உதவியுடன் மீண்டும் ரகசிய அறையினுள் சென்று அங்கிருந்த படுக்கை அறையை பார்த்தபோது அந்த அறை முழுவதும் ‘மல்லிகைப் பூ சென்ட் வாசம் வீசியது’. இதனால் தனிப்படையினருக்கு நடிகை கஸ்தூரி இங்கேதான் பதுங்கி இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பிறகு பெண் போலீசார் உதவியுடன் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது, நடிகை கஸ்தூரி போர்வையை தன்மீது போர்த்திக் கொண்டு படுத்திருந்தைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஸ்தூரியை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கஸ்தூரியை தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக 13 மணி நேரம் நீண்ட பயணத்திற்கு பிறகு நேற்று 12 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதற்கு முன்பாக நடிகை கஸ்தூரிக்கு தனிப்படையினர் இரவு உணவுக்காக அவரிடம், அசைவம் உணவு வேண்டுமா அல்லது சைவ உணவு வேண்டுமா என்று கேட்டு அவர் விரும்பிய உணவை வாங்கி கொடுத்தனர்.

பிறகு நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 5 மணிக்கு சூடாக ஒரு கப் காபியையும் போலீசார் வாங்கி கொடுத்தனர். பிறகு காலை ஒரு செட் பூரி மற்றும் மசால் வடையை வாங்கி கொடுத்து அவரை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தனர். உணவு அருந்திய ஓட்டலிலேயே நடிகை கஸ்தூரி உதட்டுச் சாயம் மற்றும் முகத்தில் பவுடரை பூசிக் கொண்டு தன்னை அழகுப்படுத்தி கொண்டார். பிறகு வாகனம் சிந்தாதிரிப்பேட்ைட காவல் நிலையம் வந்தடைந்ததும், கேமராக்கள் முன்பு முகமலர்ச்சியுடன் வணக்கம் செலுத்தியபடி கஸ்தூரி காவல் நிலைத்திற்குள் போஸ் கொடுத்தபடி சென்றார்.

பின்னர் கஸ்தூரியிடம் எழும்பூர் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசியது குறித்து விளக்கம் அளித்தார். அதை போலீசார் வழக்கு மூலமாக பதிவு செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கஸ்தூரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு கஸ்தூரியை எழும்பூர் 5வது நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரை நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகை கஸ்தூரியை வாகனத்தில் அழைத்து சென்று புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக கஸ்தூரியை நீதிமன்ற வளாகத்தில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் வாகனத்தில் ஏற்றி அழைத்து வந்த போது, கேமராக்களை கண்டதும் ‘நீதி வெல்லட்டும்….’ என கோஷம் எழுப்பினார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரியை மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் கோவை போலீசார் அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

* தன்னை விடுவிக்க கோரி நீதிபதியிடம் கெஞ்சிய கஸ்தூரி
தெலுங்கு மக்களை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு எழும்பூர் 5வது நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா முன்பு கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் பேசிய நடிகை கஸ்தூரி, ‘‘நான் பேசியது தவறுதான், நான் சிங்கிள் மதர், எனக்கு மாற்றுத்திறன் குழந்தை இருக்கிறார். குழந்தையை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே என்னை சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்று மன்றாடினார். ஆனால் நீதிமன்ற நடுவர், வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

* நான் தலைமறைவாகவில்லை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ
நான் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருந்தேன். நேற்று சூட்டிங் முடிந்துதான் வீட்டிற்கு வந்தேன். அப்போதுதான் என்னை கைது செய்தனர். நான் ஐதராபாத்தில் தான் வேலை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன் என எல்லோருக்கும் பலதடவை சொல்லி இருக்கேன். போன் என்னிடம் இல்லை. ஏன் என்றால், என்னுடைய வழக்கறிஞர் போனை வாங்கி வைத்து கொண்டார். மனஉளைச்சல் அதிகமாக இருந்தது. ஊடகவியலாளர்கள் ரொம்ப அதிகமாக போன் செய்து கொண்டு இருந்ததால், போனை வாங்கி வைத்து கொண்டார்.

இப்போது கூட இரவல் போனில்தான் பதிவு செய்கிறேன். நான் எங்கேயும் தலைமறைவாகவில்லை. எங்கேயும் ஓடவில்லை, ஒளியவும் இல்லை. ஐதராபாத்தில் எனது வீட்டில்தான் இருந்தேன். அதன் பிறகுதான் கைது செய்தனர். நானே அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். இதுவரைக்கும் நான் பத்திரிகையில் வந்த செய்திகளை பார்க்கவில்லை. பயம் எல்லாம் கிடையாது. நான் இதுவரை எந்த தவறும் செய்யவில்லை என வீடியோ மூலம் கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.

The post தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு ஆபாச நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article