ஒன்றிய அரசின் நிதி ஆணைய குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: வரி பகிர்வு அடிப்படையில் நிதியை வழங்க வலியுறுத்துகிறார்

1 hour ago 1

சென்னை: ஒன்றிய அரசின் 16வது நிதி ஆணைய குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழகத்திற்கு வரி பகிர்வு அடிப்படையில் நிதியை வழங்க அவர் வலியுறுத்துவார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிர்ந்து அளிக்க இந்திய அரசியலமைப்பு சட்டம் 280-ன் படி ஒன்றிய அரசு நிதி கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. உயரிய அதிகாரங்களை படைத்த நிதி கமிஷனை சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் 16வது நிதி கமிஷன் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் நேற்று தமிழகம் வந்தனர். இந்த குழுவின் உறுப்பினர்களான அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியாகாண்டி கோஷ், செயலாளர் ரித்விக் பாண்டே, இணைச் செயலாசளர் ராகுல் ஜெயின் உட்பட 12 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அதன்பின்னர், கிண்டியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் தங்கி இருந்த நிதிக்குழு உறுப்பினர்களுக்கு முதல்வர் இரவு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை 10 மணியளவில் நிதி ஆணையத்தின் குழுவினர் ஆலோசனை மேற்கொள்கின்றனர். இந்த கூட்டத்தின் வாயிலாக வரி பகிர்வின் அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என முதல்வர் நிதிக்குழுவிடம் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து தொழில்துறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இக் குழு தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறது.

இறுதியாக இன்று மாலை 6 மணிக்கு நிருபர்களை சந்தித்து பேச அக் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வுகளை தொடர்ந்து, கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி ஆலையை நாளை நேரில் பார்வையிடுகின்றனர். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று ஏற்றுமதி தொடர்புடைய யூனிட்களை பார்வையிடுகின்றனர். பிற்பகலில் சிறப்பு விமானத்தில் மதுரை செல்லும் இக்குழுவினர் அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கின்றனர். நாளை இரவு ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளதாகவும் பயண திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வரும் 20ம் தேதி காலையில் தனுஷ்கோடி செல்லும் குழுவினர், பின்னர் ராமநாதபுரம் நராட்சி அலுவலகம் சென்று பார்வையிடுகின்றனர். தொடர்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தைப் பார்வையிடுகின்றனர். அதனை தொடர்ந்து பிற்பகலில் மீண்டும் சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். ஏற்கனவே, கடந்த 15வது நிதிக்குழுவானது 41 சதவீத பகிர்வை பரிந்துரைத்தது. ஆனால் முதல் 4 ஆண்டுகளில் மொத்த வரி வருவாயில் 31.42 சதவீதம் மட்டுமே பகிரப்பட்டது.

ஒருபுறம், செஸ் மற்றும் மேல் வரி ஆகியவற்றால் நிதிப்பகிர்வு குறைந்துள்ளது. மறுபுறம், நிதிப்பகிர்வு முறை மாற்றத்தின் காரணமாக ஒன்றிய அரசின் திட்டங்களில் மாநில அரசுகளின் பங்கு அதிகரித்து வருகிறது. இது மாநிலங்களுக்கு இருபுறமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அரசியலமைப்பின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட துறைகளுக்கான ஏற்கெனவே செயல்படுத்தப்படும் மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதி வளத்தை குறைத்துள்ளது.

அதேநேரம், செஸ் மற்றும் மேல் வரியின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது மற்றும் மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், ஒரு வழிமுறையை நிதிக்குழுக்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். தமிழகத்தின் அனுபவத்தில், மாநிலத்தின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, நிதிக்குழுக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வருவதாக தமிழகத்தின் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த 9வது நிதிக்குழுவின் போது, 7.931 சதவீதமாக இருந்த அதிகாரப்பகிர்வில் தமிழகத்தின் பங்கு, 15வது நிதிக்குழுவில் 4.079 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தொடர் குறைப்பின் காரணமாக, தமிழகத்துக்கு ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலுவைக்கடனில் 43 சதவீதமாக உள்ளது. இந்த நிதிக்குறைப்பு மாநில நிதியத்தின் மீது மிகப்பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதுடன், மாநிலம் தனது முழுமையான திறனையும் அடைவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதையும் பிரதிபலிப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இதனிடையே மாநிலத்தின் நிதி தேவைகள், ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிவாரணம் மற்றும் வரிப்பகிர்வு போன்றவற்றை எடுத்துரைத்து, நிதி பெறுவது போன்ற பணிகளை மேற்பார்வையிட வணிக வருவாய்த்துறை செயலர் பிரஜேந்திர நவ்னீத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். 16வது நிதிக்குழு தனது பரிந்துரைகளை 2025ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, ஏப்ரல் 1, 2026 முதல் 16வது கமிஷன் பரிந்துரைகளின்படி தமிழகம் தனது நிதி ஒதுக்கீடுகளைப் பெறத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னை வந்தடைந்தவுடன் நிதி ஆணையத்தின் குழுவினர் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ஒன்றிய அரசின் நிதி ஆணைய குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: வரி பகிர்வு அடிப்படையில் நிதியை வழங்க வலியுறுத்துகிறார் appeared first on Dinakaran.

Read Entire Article