![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36412735-annamalai1.webp)
சென்னை,
சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ஈ.சி.ஆர் பகுதியில் நடந்த சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது. தி.மு.க கட்சி கொடி கட்டிய காரில் சென்று பெண்ணிடம் மோசமாக நடந்துள்ளனர்.தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்து செய்த செயலை பார்க்கும்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் உதாரணம்.
இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு முழு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. இரவு, பகல் என எந்த நேரத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மாநில அரசு காவல் துறைக்கு பேட்ரோல் வாகனங்களை வாங்கிக் கொடுத்து ரோந்து போகச் சொல்ல வேண்டும். கையாலாகாத தி.மு.க. அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.