சென்னை,
சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது.
அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் ஈசிஆர் சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை தி.மு.க. கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.
இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்தது. பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஈசிஆர் வீடியோ தொடர்பாக தாம்பரம் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், முட்டுக்காடு அருகே வந்த போது இளைஞர்கள் 7,8 பேர் இரு கார்களில் வந்து எங்களை வழிமறித்து பிரச்சினை செய்தனர். அப்போது காரை நிறுத்தாமல் சென்ற போது, வீட்டின் அருகே காரை நிறுத்தினர். அப்போது காரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக இளைஞர்கள் எங்களுடன் தகராறு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேபோல் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்ய தொடங்கினர்.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் ஓட்டி வந்த வாகனத்தை, ஆண்கள் சிலர் வழிமறித்து அவர்களை விரட்டிச் சென்று அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், முறையான விசாரணை மூலம் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். அதே வேளையில், பெண்கள் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது என்று நினைப்பவர் நமது முதல்-அமைச்சர் என்று பதிவிட்டுள்ளார்.