சென்னை: இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி எப்15 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 100வது ஏவலுக்கு தயாராக உள்ளது. என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எப் 15 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கும், பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) உருவாக்க திட்டமிடப்பட்டு 2013 முதல் 2018ம் ஆண்டு வரையான கால கட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன் மூலம் இந்தியாவுக்கென பிரத்யேக வழிகாட்டி நாவிக் தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ளது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் போல இந்தியாவுக்கான தனித்துவ வழிகாட்டுதல் அமைப்பை ஏற்படுத்த நாவிக் தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்தி வருகிறது. நாவிக் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும், இந்த அமைப்பு இந்தியா மற்றும் இந்திய நிலப்பரப்பைத் தாண்டி 1,500 கிமீ வரை துல்லியமான நிலை, வேகம் மற்றும் நேர சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நாவிக் தொழில்நுட்பத்தில் ஐஆா்என்எஸ்எஸ் 1ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோளான என்விஎஸ் 01 செயற்கைக்கோள் கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரோ செலுத்தியது. தற்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் என்விஎஸ்-02 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
ஜிஎஸ்எல்வி எப் 15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கைக்கோள் இன்று காலை 6.23 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ராக்கெட்டுடன் செயற்கைகோள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து ராக்கெட்டில் எரிப்பொருள் நிரப்பட்டு ஏவுதலாக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது. மேலும் ராக்கெட் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஏவுதல் என்பதால் இந்த திட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
The post இஸ்ரோவின் 100வது ராக்கெட்: ஜிஎஸ்எல்வி எப்15 இன்று விண்ணில் பாய்கிறது appeared first on Dinakaran.