இஸ்ரேல் வான்வழி தாக்குதலுக்கு ஈரானின் பதிலடி எப்படியிருக்கும்: நிபுணர்கள் சொல்வது என்ன?

3 weeks ago 5

டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதற்கு ஈரான் எப்படிப்பட்ட பதிலடி தரப் போகிறது என்பதை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. ஈரான் எடுக்கும் முடிவுதான் மத்திய கிழக்கில் முழு அளவிலான போர் மூள்வதை தீர்மானிக்கும். ஈரான் ராணுவ ரீதியாக இஸ்ரேலுக்கு பதிலடி தருவது சொந்த நாட்டு மக்களுக்கு தனது பலத்தை காட்டுவது மட்டுமல்ல, காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு தரும் ஊக்கமாகவும் இருக்கும். ஆனால் அப்பாதையை ஈரான் தேர்வு செய்வது அரிது என்கிறனர் நிபுணர்கள்.

ஈரான் தற்போதைக்கு பின்வாங்கலாம். ஏனென்றால் பதில் தாக்குதல் நடத்தினால் அதன் பலவீனங்கள் வெளிப்படலாம், அதோடு இஸ்ரேலின் மிக சக்திவாய்ந்த தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருப்பதால் அங்கு அமையும் புதிய அரசுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டு சர்வதேச தடைகளை எளிதாக்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் விரும்புகிறார்.

அதோடு, இஸ்ரேலுக்கு பதிலடி தருவதை விட காசா, லெபனானில் போர் நிறுத்தம் முக்கியமானது என ஈரான் ராணுவமும் நேற்று முன்தினம் கூறி உள்ளது. நேற்று மக்களிடம் உரையாற்றிய ஈரான் உச்ச தலைவர் காமனேனி, இஸ்ரேலின் தாக்குதலை மிகைப்படுத்தவோ, குறைத்து மதிப்பிடவோ கூடாது என கூறி உள்ளார். எனவே இப்போதைக்கு இஸ்ரேலுக்கு எதிராக எந்த விதமான யுத்தத்திற்கும் செல்ல ஈரான் விரும்பாது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே போல இஸ்ரேலும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை துல்லியமாக தவிர்த்துள்ளது. அதன் இலக்குகள் மிக மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளது. இது, எந்த நிலையிலும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் விரும்பாது என்பதை காட்டும் வகையில் உள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்படுவதை அமெரிக்காவும் விரும்பவில்லை. அமெரிக்காவை எதிர்த்து இஸ்ரேல் செயல்படாது என்பதால் இஸ்ரேல், ஈரான் இரு தரப்பும் நேரடி மோதலை தற்சமயத்திற்கு நிறுத்தி வைப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது.

* மொசாட் தலைமையகம் அருகே தீவிரவாத தாக்குதல்
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகம் தலைநகர் டெல் அவிவ் அருகே கிலிலாட்டில் அமைந்துள்ளது. மொசாட் தலைமையகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று லாரி ஒன்று புகுந்தது. அதில் ஒருவர் பலியானார். 33 பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேலைச் சேர்ந்த அரபு நாட்டவர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என இஸ்ரேல் போலீசார் விசாரிக்கின்றனர்.

* பாதியில் பேச்சை நிறுத்திய நெதன்யாகு
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசினார். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நெதன்யாகு பேச தொடங்கியதும், சில எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர். ‘உங்களை எண்ணி வெட்கப்படுகிறோம்’ என கோஷமிட்டனர். ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகள் இதுவரை முழுமையாக விடுவிக்கப்படாததால் பலர் நெதன்யாகு மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் ஆரம்பித்த சிறிது நேரத்தில் நெதன்யாகு பேச்சை நிறுத்தினார்.

The post இஸ்ரேல் வான்வழி தாக்குதலுக்கு ஈரானின் பதிலடி எப்படியிருக்கும்: நிபுணர்கள் சொல்வது என்ன? appeared first on Dinakaran.

Read Entire Article