ஆம்ஸ்டர்டாம்,
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் காசா பகுதியில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்த போரால் காசாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
இதற்கிடையில், காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே காசாவில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருவதாக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச குற்றவியல் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், நெதன்யாகு மற்றும் காலண்ட் ஆகியோர், காசா மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவற்றின் விநியோகத்தை உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே தடை செய்து, போர் குற்றம் இழைத்ததற்கான சான்றுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது வாரண்ட் உத்தரவு ரகசியமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது வரை இந்த கைது வாரண்ட்டில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் இதனை பொதுவெளியில் வெளியிட முடிவு செய்ததாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக இஸ்ரேல் தரப்பில் முன்வைக்கப்பட்ட மேல்முறையிட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.