டமாஸ்கஸ்,
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி கடுமையான தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதல் நடந்து ஓராண்டை நெருங்கி வரும் சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.
லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர், ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக் கொல்லப்பட்டனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் அல்-காசிர். சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இருந்தபோது, இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் பலியானார்.
இதனை ஹிஸ்புல்லா அமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இஸ்ரேலின் இந்த தாக்குதலில், 3 தளங்களை கொண்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இதில், 4 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த கட்டிடத்திற்கு ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் ஈரான் புரட்சி காவல் படை தலைவர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம் என தகவல் தெரிவிக்கின்றது.
இதனால், இஸ்ரேல் பாதுகாப்பு படை அதனை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது. தொடர்ந்து லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.