
காசா,
இஸ்ரேல்-காசா போர் கடந்த 2023, அக்டோபர்-7 முதல் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு பணய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. அடுத்தகட்டமாக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்க இருந்த நிலையில் பணய கைதிகளை விடுவிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் இஸ்ரேல்- காசா போர் மீண்டும் மூண்டு, தற்போது தீவிரம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு, பேசும்போது, "ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க காசா பகுதி முழுவதும் ஒரு புதிய பாதுகாப்பு வழித்தடத்தை இஸ்ரேல் உருவாக்கும்" என்று அறிவித்தார். இதன்மூலம் தெற்கு நகரமான ரபாவை பாலஸ்தீனத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்க முடியும் என்றும், அதன்மூலம் ஹமாஸ் போராளிகளை பணிய வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான அன்று இரவே காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 54 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியானது. கான் யூனிஸ் நகர நிர்வாகம் கூறும்போது, நசீர் ஆஸ்பத்திரிக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 14 பேரின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் 19 பேரின் உடல்கள் கான் யூனிஸ் நகருக்கு அருகே உள்ள ஐரோப்பிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆலி ஆஸ்பத்திரிக்கு 7 குழந்தைகள் உள்பட இன்னும் 21 பேரின் உடல்கள் கொண்டு செல்லப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் அவர்கள் பலியானதாகவும், அவர்களில் பெண்களும், குழந்தைகளும் மிகுதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது