வாஷிங்டன்,
ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் இந்த பதிலடி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய தாக்குதலை வெள்ளை மாளிகை சூழ்நிலை அறையில் இருந்து கண்காணித்து தங்கள் தேசிய பாதுகாப்பு குழுவிடமிருந்து வழக்கமான புதுப்பிப்புகளை பெற்று வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும் ஈரான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உதவுமாறும், இஸ்ரேலை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துமாறும் அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.