
டெல்லி,
இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல், இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதல் நடத்திய நிலையில் அந்த அணு உலைகள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக ஈரான், இஸ்ரேலில் வசித்து வரும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இந்தியாவை சேர்ந்த பலரும் இஸ்ரேலில் தங்கி கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு ஈடுபட்டு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இஸ்ரேலில் இருந்து முதற்கட்டமாக 161 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் ஜோர்டானுக்கு சென்றனர். ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா வந்துள்ளனர். டெல்லி வந்தடைந்தவர்களை அதிகாரிகள், உறவினர்கள் வரவேற்றனர்.