இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை விடுதலை செய்த ஹமாஸ்

3 hours ago 1

காசா முனை,

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

6 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 13 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக தற்போதுவரை 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து, தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்கிறது. அதன்படி, ஒஹட் பென் அமி(56), இலி ஷராபி(52) மற்றும் ஆர் லிவி(34) ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த 3 பேருக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

கடந்த ஜனவரி 19-ந்தேதி போர் நிறுத்தம் தொடங்கிய பிறகு, 5-வது முறையாக பணய கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். தெய்ர்-அல்-பலா நகரில் பணய கைதிகளை விடுதலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பணய கைதிகள் விடுதலை செய்யப்படும் இடத்திற்கு தன்னார்வல அமைப்பான ரெட் கிராஸ் அமைப்பின் மீட்பு வாகனங்கள் வந்து சேர்ந்தன. மேலும் அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.

அதே சமயம், முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பலர், துப்பாக்கிகளுடன் அதே இடத்தில் கூடினர். பின்னர் ஒரு வெள்ளை நிற வாகனத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் 3 இஸ்ரேலிய பணய கைதிகளையும் அழைத்து வந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு தற்காலிக மேடையில் நிற்க வைத்தனர். தொடர்ந்து பணய கைதிகளிடம் மைக்கை கொடுத்து பேசுமாறு கூறினர். இவ்வாறு பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் பொதுவெளியில் பேச வைத்தது இதுவே முதல் முறையாகும்.

இதைத் தொடர்ந்து 3 பணய கைதிகளையும் ரெட் கிராஸ் தன்னார்வலர்களிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர். இன்று விடுதலை செய்யப்பட்ட 3 இஸ்ரேலிய பணய கைதிகளும் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடந்த தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article