
சென்னை,
'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கி உள்ளார். அவர் இசைஞானி என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் கடந்த 8-ந் தேதி லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. மேலும் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
இந்தநிலையில், தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களான ஆர்.வி. உதயகுமார், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், பேரரசு மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ரோஜா பூமாலையை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
