
சென்னை,
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்கும் படம், 'பேரன்பும் பெருங்கோபமும்'. இந்த படத்தில் ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சிவபிரகாஷ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதைச் சுவாரசியமான திருப்பங்களுடனும் இந்தப் படம் இருக்கும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அந்த விழாவில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி உதயகுமார், வசந்தபாலன், தேவயானி மற்றும் சீமான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது பேசிய சீமான், சிவப்பிரகாஷ் இயக்கி இருக்கும் இந்த படம் அவரது முதல் படம் போலவே இல்லை, அவ்வளவு சிறப்பாக உள்ளது. முதல் படத்திலேயே இயக்குநர் சிவபிரகாஷுக்கு இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி. இளையராஜாவை 'இசைஞானி' என்ற அழைத்தால் பொருத்தமாக இருக்காது. 'இசை இறைவன்' என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.