மூளையின் முடிச்சுகள்
மகப்பேறும், பிள்ளைப்பேறும் மஹாதேவனுக்கே தெரியாது என்ற பழமொழி ஒன்று உண்டு. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் தகவல் கடவுளுக்கே தெரியாது என்பதல்ல இங்கு பிரச்னை, ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று அவருக்கே தெரியவில்லை என்பதுதான் தற்போதைய சவாலாக இருக்கிறது.ஒருநாள் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, கும்பலாக நின்று கொண்டு சிலர் கத்தி கூச்சலிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.
சாலைகளில் சண்டைக்கா பஞ்சம் என உற்று நோக்கும்போது, இது இரு குடும்பத்தினருக்கு இடையேயான சண்டை எனப் புரிந்து, என்னவென விசாரித்ததில், பதினைந்து வயதுக்குள் இருக்கும் மாணவி ஒருவரை, பதினாறு வயது மாணவன் கர்ப்பமாக்கி இருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது. அந்த மாணவியை, மாணவன் திருமணம் செய்ய வேண்டுமென்று பெண்ணின் பெற்றோர், பையனின் பெற்றோரிடம் சாலையில் நின்று கத்தி கூச்சலிட்டு நியாயம் கேட்கின்றனர். பையனின் வீட்டினரோ, மூன்று பவுன் நகை போட்டால் உடனே திருமணம் என்று அங்கேயே பேச்சு வார்த்தையில் இறங்குகின்றனர்.
சம்பந்தப்பட்ட இருவரும் வளரிளம் பருவ வயதினர் என்பதையே இந்த இடத்தில் பெற்றோர் மறந்து விட்டார்கள் என்றே நினைக்கின்றேன். அதனால்தான், நடுரோட்டில் இப்படியான பேச்சு வார்த்தையை தைரியமாக இரு குடும்பத்தினரும் செய்து கொண்டிருந்தார்கள். தற்போது செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து நாம் பார்த்தும் கேள்விப்பட்டும் வருகிறோம்.
ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரிடம் பேசும் போது அவர் சொன்ன விஷயம்… எங்கள் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகிய நாங்கள் எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்து விடுகிறோம். ஆனால், இந்த சோசியல் மீடியா தாக்கத்தினால் காதலித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாய மனநிலையோடு, பைக்கில் ஜாலியாக காதலனோடு ஊர் சுற்ற வேண்டும், பிறந்தநாள், காதலர் தினம் போன்ற நாட்களை திரைப்படங்களில் காண்பிப்பது போல் கொண்டாட வேண்டும் என்று இளம் தலைமுறையினர் ஆசைப்படுகின்றனர். இந்த மாதிரியான மாயையில் இருந்து இந்த தலைமுறையை எப்படி விடுவிப்பது என்றுதான் தெரியவில்லை என்றார்.
எல்லா காலகட்டத்திலுமே இம்மாதிரியான காதல் கொண்டாட்டங்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. ஆனால், இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில், கொண்டாட்டம் என்ற பெயரில் இளம் தலைமுறையினர் பின்னோக்கிச் செல்வதுதான் வேதனைப்பட வைக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பலதரப்பட்ட வகையில் கல்வி கற்பதற்கேற்ற சூழல் இருக்கின்ற நிலையில், கல்வியில் இடைநிற்றலும் ஆங்காங்கே இலைமறை காயாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் வளரிளம் பருவ மாணவிகள் கர்ப்பம் தரிப்பதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டின் கணக்குப்படி, 14,360 வளரிளம் பருவ மாணவிகள் கர்ப்பம் அடைந்திருக்கிறார்கள்.
யுனிசெப் வரையறைபடி, வளரிளம் பருவ வயதென்பது பதின்மூன்றிலிருந்து தொடங்கி பத்தொன்பது வயது வரை எனக் கணக்கிடுகிறார்கள். பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது உள்ள வளரிளம் பருவப் பெண்கள் 7.8% பேர் கர்ப்பம் அடைந்தவர்களாக அல்லது குழந்தை பெற்ற தாய்மார்களாக இருக்கின்றனர் என்று தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகள் நமக்குத் தெரிவிக்கின்றது. தரவுகளின் வழியாகப் பார்த்தால், சமூக மாற்றம் நம் இளைஞர்களை பின்னோக்கி தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதும் புரிகிறது.
தகவல் தொழிநுட்பம் அசுர வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட வயது இளைஞர்கள் சமூகக் கொண்டாட்ட மனநிலையுடனும், சாகச மனநிலையுடனும் மட்டுமே இருக்கிறார்கள். வாழ்க்கையின் ஒட்டு மொத்த அனுபவத்தையும் குறுகிய காலகட்டத்திலேயே அனுபவிக்க ஆசைப்படுகின்றனர். உலகத்தையே தூக்கி நிறுத்த ஆசைப்படுகின்றனர். வாலிப வயதில் தான் நேசித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபரால், நான் கொண்டாடப்பட வேண்டும் என்று நினைப்பதும் இயல்புதான். ஆனால், இன்றைக்கு அதன் வரைமுறை அளவில்லாமல் இருக்கின்றது என்பதுதான் இங்கே நம்மை பயமுறுத்துகிறது.
காதல் எப்ப வரும், எப்படி வருமென்று தெரியாது, யார் மீது வரும், எந்த சூழலால் வரும் என்றும் தெரியாது போன்ற வசனங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, குழந்தைகள் என நாம் நினைப்பவர்கள், காதலில் சிக்கிக் கொள்கின்றனர். விளைவு, பள்ளி மற்றும் மனநல மருத்துவமனைகளில் ஆலோசனைக்கு வரும் இளம் தலைமுறையினரிடத்தில், சிறார் திருமணம் மற்றும் சிறார் காதல் என்றெல்லாம் காட்சிகளைக் காண முடிகிறது. இவர்களுக்கு தினமும் ஆலோசனை வழங்குவதுதான் இன்றைய முக்கியப் பணியாகவும், பெரும்பாலான ஆசிரியரின் வேலையாகவும் இருக்கிறது.
வளரிளம் பருவத்தினரின் இந்த மாற்றத்திற்கு காட்சி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும்தான் காரணமா என்றால், அதுவும் ஒரு காரணம்தான். இங்கு செய்திகள் அனைத்துமே, மக்களிடத்தில் தொடர் நிகழ்வாக காட்சிப்படுத்தப்படுகிறது அல்லது திணிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு இது தேவையா என்று கேள்வி கேட்பதற்கு முன், அவர்கள் கையில் அனைத்துவிதமான சூழலையும் கொடுத்துவிட்டு, வேடிக்கை மட்டும் பார் என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறோம். இது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்பது நமக்கும் தெரியவில்லை.
வளரிளம் பருவ வயது என்பது உடலும், மனதும் முழு எனர்ஜியுடன் பல விஷயங்களை கற்றுக்கொள்ள துடிக்கின்ற, ஆசைப்படுகின்ற பருவமாக இருக்க, அவர்களிடத்தில் நாம் காதலையும், காமத்தையும், வன்முறைகளை மட்டுமே பெரிதளவில் காட்சிப்படுத்துகிறோம். இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டுமானால், இங்கு பாலியல் சார்ந்த உரையாடல் இயல்பாக்கப்பட வேண்டும். நாம் பார்த்து வளர்ந்த சமூகம் என்பது, அனைத்தையும் பேசிப்பேசிதான் மாற்றங்கள் பலவற்றை அடைந்திருக்கிறது.
எந்த வயதிலும் பாலியல் சார்ந்த அல்லது எதிர்பாலினர் மீதான ஈர்ப்பு சார்ந்த கேள்விகளை பெற்றோர் மற்றும் ஆசிரியர் முன் குழந்தைகள் அல்லது வளரிளம் பருவத்தினர் எழுப்பினால், அதற்கு முறையாக பதில் சொல்ல நாம் பழக வேண்டும் அல்லது அந்த குழந்தைகளுடன் தொடர் உரையாடலை ஏற்படுத்தப் பழக வேண்டும்.சிந்தனையே நான் என்கிறது ஐரோப்பியத் தத்துவம். அதனால்தான் உடல், உள்ளம், மொழி, சமூகம் இந்த நான்கின் மீதான எண்ணங்கள் மனிதனை ஆக்ரமிக்கின்றன. உடலுக்கும் பிம்பத்துக்கும் இடையிலான ‘லிபிடோ’ சார்ந்த உறவுமுறை உணர்வுகளை உணர்வெழுச்சிகளாக மாற்றி விடுகிறது. அதாவது, எதிர்காலத்தில் எந்த மாதிரியெல்லாம் இருக்க வேண்டுமென்கிற ஆசையே இளைஞர்களை இவ்வாறு செய்ய வைக்கிறது.
மனிதனின் சிந்தனைக்கும், சமூகத்திற்கும் ஒரு அடையாளம் அவசியம். அந்த அடையாளத்தைப் பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். வளரிளம் பருவ வயதில் சிந்திக்கும் அனைத்தையும், சமூகத்திலிருக்கும் அனைவர் மீதும் செலுத்துவதற்கு நாம் உரிமை கொண்டாட முடியாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இதில் தனிநபரின் வாழ்க்கை, அவர்களின் துறை சார்ந்த வளர்ச்சி, சமூகத்தில் அவர்களுடைய பொறுப்பு, தனிநபர் பொருளாதார முன்னேற்றம் இவற்றையெல்லாம் சரிவர கடைபிடிக்க முடியாமல் சமூகம் பின்னடைவு அடைகிறது என்பதையும் புரிய வைக்க வேண்டும். இளைஞர்களின் பாலியல் உந்துதலில் ஏற்படும் சிக்கல்களால் இவை அனைத்துமே தடைபடுகிறது என்பதையும் அவர்களிடத்தில் பேச வேண்டும்.இந்த மாற்றத்தை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக சரி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கின்ற சவாலான விஷயமாக அரசும், பொது மக்களும் புரிந்து செயல்பட வேண்டும்.
காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்
The post இளம் வயதில் கர்ப்பம்! appeared first on Dinakaran.