‘‘இலைக்கட்சி கூட்டத்தில் மாஜி ஷாக் மந்திரிக்கே ஷாக் கொடுத்த பெண் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 week ago 3

‘‘தொழில் ரீதியான வளர்ச்சிக்கு கட்சியை பயன்படுத்தி வருகிறதா தாமரை கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டி வர்றாங்களமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மெடல் மாவட்ட மலராத கட்சியில் சேர்ந்த பலர் குறிப்பிட்ட காலத்திற்குள் பொருளாதார ரீதியாக பெரும் வளர்ச்சி பெற்றுள்ளனராம்.. குறிப்பாக பட்டாசு நகரில் கடைக்கோடி ஊரின் பெயரைக் கொண்ட ஒருவரின் அசுர வளர்ச்சி தொழிலதிபர்களிடையே பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளதாம்.. சட்டவிரோத பட்டாசு தயாரிப்புகளுக்கு இவரிடம் இருந்துதான் அட்டைப்பெட்டிகள் சப்ளை ஆனதாக தகவல் வெடித்து தீயாய் பரவி வருகிறது..

தொழில்ரீதியான வளர்ச்சிக்கு இவர் கட்சியை பயன்படுத்தி வருகிறார். மாவட்டத்தில் யாரையும் வளரவிடாமல் தனது கட்டுப்பாட்டிற்குள் கட்சியை வைத்துள்ளார் என பிற நிர்வாகிகள் புலம்பி வர்றாங்க.. இவரது வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களும், மாவட்ட மலராத கட்சி நிர்வாகிகளும், அவரது தொழில் ரகசியம் குறித்து மேலிடத்திற்கு புகார்களை தட்டி விட்டிருக்காங்க.. இதன்பேரில், ஒன்றிய அரசு அதிகாரிகளும் ரகசிய விசாரணை நடத்தி வர்றாங்களாம்.. தொழிலையும் காப்பாத்தணும்… கட்சியிலேயும் செல்வாக்கா இருக்கணும்… என்ன பண்ணலாமென தனது அடிபொடிகளிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி அமைச்சர் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார் என திரைமறைவில் கண்காணித்து வர்றாங்களாமே இலைக்கட்சி நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் திரைமறைவில் இருந்து வந்த உட்கட்சி பூசல் தற்போது வீதிக்கு வந்துருக்கு.. இதனால் நெற்களஞ்சியம் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் சீனியர் நிர்வாகிகள், மாஜி அமைச்சர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம்… இதில் டெல்டாவை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர், எந்தவித டென்சனும் இல்லாமல் எதையும் பற்றி கவலைப்படாமல் ஹாயாக இருந்து வருகிறாராம்..

வீட்டை விட்டுகூட வெளியே வராமல் கட்சி நிர்வாகிகளை கூட சந்திக்காமல் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறாராம்.. மாஜி அமைச்சர் ஹாயாக இருந்து வருவதால் சந்தேகம் அடைந்த கட்சி நிர்வாகிகள் அவர் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என திரைமறைவில் கண்காணித்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி ஷாக் மந்திரியும், இனிப்பான எம்எல்ஏவும் கூட்டம் ஒன்றில் மாறிமாறி குற்றஞ்சாட்டி பொங்கி எழுந்தது தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறதாமே..’’எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் இலைக்கட்சியின் கோஷ்டி மோதல் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளதாம்.. சமீபத்தில் நடந்த கூட்டத்தில் மாஜி ஷாக் மந்திரியானவர், கோட்டை என முடியும் தொகுதியின் பெண் எம்எல்ஏவை சரமாரியாக மறைமுகமாக தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்காம்.. கட்சியை சீரழிப்பதற்கே சிலர் இருக்காங்க.. அவர்களால் கட்சி அழிவை நோக்கி செல்கிறது. இதே நிலை நீடித்தால் தொண்டர்கள் நம்மிடம் இருக்க மாட்டாங்க..

கட்சியை வளர்க்க சொன்னால், யாரையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறாய் என ஒருமையில் ஏகத்துக்கும் பேசிய அவர், ஒரு கட்டத்தில் விரைவில் தேர்தல் வரப்போகுது.. தூங்கு மூஞ்சியாக இருந்தால் எப்படி என சரமாரியாக பேசிக் கொண்டே போக, பொங்கி எழுந்த அந்த இனிப்பான ெபண் எம்எல்ஏ தன்னை கட்சியினர் யாரும் மதிப்பதில்லை. எனக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என தனது பங்குக்கு சரமாரியாக பதிலடி கொடுத்திருக்காரு.. கூட்டத்தில் இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டிய நிலையில் கூடியிருந்த தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி விட்டனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை கட்சியில் நிலவும் குழப்ப நிலைப்பாடு காரணமாக புல்லட்சாமி தரப்பு புலம்புகிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குட்டி பிரான்ஸ் பிரதேசத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெற சபையை கூட்டியிருந்தாராம் நடுநிலை நாயகர். சபை துவங்கியதுமே குழந்தைகள் தின தந்தையின் பெயர் கொண்ட அந்த நடுநிலை சுயேச்சையோ, சபை நாயகரின் முன்பு தர்ணாவில் குதிக்கவே சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்ததாம்..

தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியோ, ஆட்சியின் அவலம் கண்டித்து வெளிநடப்பு செய்யவே, அந்நேரத்தில் தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி ஓட்டெடுப்பை வெற்றிகரமாக நடத்தினாராம் சபை செல்வமானவர். அதாவது ஆளுங்கட்சி பிரதிநிதிகள் மட்டுமே சபைக்குள் இருந்த நிலையில், தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்து சுயேச்சைகளுக்கு அதிரடி காட்டினாராம் சபையின் நாயகர்.

இது ஒருபுறமிருக்க, ஆளுங்கட்சி கூட்டணி ஒன்றிய தரப்பு கட்சியின் அதிருப்தி கோஷ்டிகள் மதுபான கொள்கைக்கு எதிராக சபை துவங்குவதற்கு முன்பே போர்க்கொடி தூக்கியிருக்க, சபை முடிந்த பின்போ விளக்கம் அளித்த அக்கட்சி அமைச்சரான சிவாயமானவரோ, மாநில வருவாயை பெருக்கவே புதிய மதுபான கொள்கை. இந்த போராட்டமோ உள்நோக்கமாக இருப்பதால் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என தடாலடியாக தெரிவித்தாராம்.. இவ்விவகாரத்தில் ஒன்றிய தரப்பு கட்சிக்குள் நிலவும் குழப்பமான நிலைப்பாடு குறித்து புல்லட்சாமி தரப்பு புலம்பி வருவதுதான் தற்போதைய ஹைலெட்..’’ என்றார் விக்கியானந்தா.

The post ‘‘இலைக்கட்சி கூட்டத்தில் மாஜி ஷாக் மந்திரிக்கே ஷாக் கொடுத்த பெண் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article