இலை, தாமரை பார்ட்டிகளின் சூழ்ச்சி தவிடுபொடியானதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

17 hours ago 1

‘‘மக்களுக்கு எதுவும் செய்யாமல், சூழ்ச்சி அரசியல் நடத்த நினைத்த இலை, தாமரை பார்ட்டிகள் இப்போ துவண்டு போய் கிடக்கிறார்களாமே.. ஏன்..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகருக்கு முதல்வர் வந்து திரும்பி இருப்பது, இலை, தாமரைக்காரர்களின் அரசியல் சூழ்ச்சியை தவிடுபொடியாக்கி இருக்கிறது. தூங்கா நகர் மாவட்டத்தின் தொன்மைக்குரிய கிராமங்களை குறிவைத்து அழித்தொழிக்கும் வகையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கென ஒன்றிய அரசு அளித்த ஒப்புதல் கைவிடப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் போராட்டக்களத்தில் தவித்தபோது கண்டுகொள்ளாதிருந்த இலை, தாமரைக்காரர்கள் இப்போதோ வெற்றியைப் பங்குபோட துடியாய் துடித்து அறிக்கைகளை அள்ளி வீசுகின்றனர். துவக்கம் முதல் மக்களிடம் உள்ளூர் அமைச்சரின் ஒத்துழைப்பு, ஒருபடி முன்னேறி முதலமைச்சரோ, ‘நான் முதல்வராக இருக்கும் வரை இத்திட்டம் வரவே, வராது’ என நெஞ்சுரத்துடன் ஒலித்த உரத்தக் குரலையும், இத்தோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசை பணியச் செய்ததையும் தூங்கா நகர் மாவட்டத்து மக்கள் மறக்கவில்லை.

திட்டம் கைவிடப்பட்ட அறிவிப்பு வந்ததுமே, தலைநகருக்குப் போய், ‘சுடுகாடாக மாறிப்போக இருந்த எங்கள் ஊர்களுக்கு உயிர் தந்தவரே, உங்களுக்கொரு நன்றிக் கூட்டம் நாங்கள் நடத்தியே ஆக வேண்டும். நீங்கள் எங்கள் கிராமங்களுக்கே வந்தாக வேண்டும்’ என கோரிக்கை வைத்து, மக்களின் அழைப்பு ஏற்ற முதல்வரை நேரில் வர வைத்து அன்பு காட்டி அனுப்பி இருக்கின்றனர். உழைப்பில் ஒருதுளியும் உறுதுணை காட்டாத இலை, தாமரைக்காரர்கள் விளைச்சலை மட்டும் சொந்தம் கொண்டாடி, இதனை அரசியலாக்க நினைத்து ஆட்டம்போட்ட சூழ்ச்சியை மக்கள் தவிடுபொடியாக்கி விட்டதாக, இந்த கட்சிகளின் தொண்டர்களே காதுபட பேசி வருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொழிற்சங்க குமுறலுக்கு என்ன காரணமாம்…’’ என்று அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டம் என்பதால், எங்களை புறக்கணிக்கிறாங்க என்று ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குமுறி கொண்டு இருக்காம். அரசு போக்குவரத்து கழகம் மண்டல மேலாண் இயக்குனர் தலைமையில் திருநெல்வேலியில் குடியரசு தின விழா நடந்துருக்கு. இதில் இந்த மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து சிறந்த டிரைவர்கள், கண்டக்டர்களை தேர்வு செய்து சான்றிதழ் கொடுத்து இருக்காங்க.

இதில் பங்கேற்க அந்தந்த மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு போய் இருக்காம். ஆனால் கடைக்கோடி மாவட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த யாருக்கும் அழைப்பு இல்லையாம். ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளை கூட அழைக்காமல், மண்டல மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் விழா நடத்துனார்களாம். எங்கள் மண்டலத்துல இருந்து டிரைவர், கண்டக்டர்கள் போறாங்க.

அவுங்க கூட நாங்களும் போய் மேலாண் இயக்குனரை சந்தித்து பேசினால் தானே எங்களுக்கு மரியாதை. பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்தவர்களுக்கு, எங்களை மட்டும் அழைக்க நினைவு இல்லையா என குமுறும் ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள், கடைக்கோடி மாவட்டம் என்பதால் எங்களை மறக்காதீங்க என போன் போட்டு மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் காட்டமாக பேசி இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பாஜவின் தன்னிச்சையான அறிவிப்பால் அதிர்ச்சியாகி இருக்காராமே புல்லட்சாமி..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரி பாஜ அமைப்பு தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, குஜராத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் பார்வையாளராக புதுச்சேரி வந்திருந்தார். பாஜ அலுவலகத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலை பார்வையிட்டதோடு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து புல்லட்சாமியை தனியார் ஓட்டலில் சந்தித்து பேசினார். சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தார்களாம். அப்போது மாஜி அமைச்சர் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம், அதனால் என்ன.. செய்துவிடலாம் என்கிற வார்த்தையை புல்லட்சாமி கூறிக்கொண்டே இருந்தாராம்.

அப்போது திடீரென, ‘மிஸ்டர் சாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் நம்முடைய வெற்றி கூட்டணி தொடரும். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்னு தன்னிச்சையாக தடாலடியாக மாஜி அமைச்சர் அறிவிக்க, வாய் பேச முடியாமல் புல்லட்சாமி மவுனமாகி விட்டாராம். ஆனால் மாஜி அமைச்சரின் அறிவிப்பால் அதிருப்தியடைந்த புல்லட்சாமி, நம்மிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் கூட்டணியை இவரே ஓகே செய்துவிட்டு செல்கிறாரேன்னு தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பினாராம். அதே நேரத்தில் கூட்டணியை விட்டு போனால் அவர்கள் எதுக்கும் தயாராக இருப்பார்கள், சரி நமக்கும் வேறவழியில்லைன்னு மனதை தேற்றிக்கொண்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை, தாமரை பார்ட்டிகளின் சூழ்ச்சி தவிடுபொடியானதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article