‘‘ரெண்டாவது தடவையும் மாஜி ேபாலீஸ்காரரை நிராகரிச்சிட்டாராமே இலைக்கட்சி தலைவர் எதற்காம்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரர் ரொம்பவே அப்செட்டாகவே இருக்காராம்.. ஆரம்பத்தில் டெல்லி தலைமையின் தொடர் எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே கருதவில்லையாம்.. கால்போன போக்கிலேயே போயிட்டிருந்தாராம்.. இது ரெண்டாம் கட்ட தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாம்.. இவரது நடவடிக்கையால் இலைக்கட்சியுடன் இனிமே கூட்டணி சேரவே முடியாது..
எதிர்காலம் நமக்கு கேள்விக்குறியாக இருக்குன்னு மேலிடத்தில் சொல்லியிருக்காங்க.. இதனை கேட்ட உள்துறையை கையில் வைத்திருப்பவர் கோபத்தின் உச்சிக்கே பேயிட்டாராம்.. இறுதி எச்சரிக்கையும் விடுத்தாராம்.. இதனை கொஞ்சமும் எதிர்பாராத மாஜி போலீஸ்காரர் நடுநடுங்கி போயிட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இந்த கோபத்தை தணிக்க வேண்டுமானால் இலைக்கட்சி தலைவருடன் நெருக்கமாக வேண்டும், அவரோடு ஒரு போட்டோ எடுத்து சண்டை இல்லைன்னு டெல்லிக்கு காட்ட வேண்டும் என மாஜி போலீஸ்காரர் திட்டம் போட்டிருக்காரு..
என்ன காரணத்தை வச்சி சந்திக்கிறதுன்ற கேள்விக்கு மும்மொழி கொள்கைளை வச்சி சந்திக்கலாமுன்னு முடிவு செஞ்சி, ரகசிய தூதும் விட்டிருக்காரு.. முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், ரெண்டாவது முறையும் கெஞ்சி கூத்தாடி நூல் விட்டிருக்காரு.. தலைவர் பட்டியலில் இருக்கும் நாலு பேரோடு வர்றோம்.. அதோடு மும்மொழி கொள்கையினால் ஏற்படும் நன்மைகளையும், அண்ணா கூறியது குறித்தும் அவருக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பேன்னு சொன்னாராம்.. ஏன்னா கம்பராமாயணத்த எழுதினது சேக்கிழாருன்னு இலைக்கட்சி தலைவர் சிஎம்மா இருக்கும்போது சொன்னாராம்..
இதனால்தான் மும்மொழி கொள்கையை புரிய வைப்பேன்னு சொன்னதா சொல்றாங்க.. இந்த தகவல அறிஞ்ச இலைக்கட்சி தலைவர் ரொம்பவே கோபம் அடைஞ்சிட்டாராம்.. ஏற்கனவே பல்வேறு நெருக்கடியில் இருக்கேன்.. அண்ணாவை பற்றி தெரிந்துகொள்ள என் கட்சியிலே ஆயிரம்பேர் இருக்காங்க.. எதையாவது சொல்லணுமுன்னு நினைச்சா இ-மெயில்ல அனுப்பச் சொல்லுங்கன்னு ரெண்டாவது முயற்சியையும் புறந்தள்ளிட்டாராம் இலைக்கட்சி தலைவர்..
என்றாலும் இலைக்கட்சி தலைவருடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்தே ஆவேன்னு ஒத்தைக்காலில் நிற்காராம் மாஜி போலீஸ்காரர். இது இலவு காத்த கிளி கதையாகத்தான் இருக்குமுன்னு இலைக்கட்சி தொண்டர்கள் அடிச்சி சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டவுன்ஷிப் ரேஷன் பொருட்களில் கைவைத்த விற்பனையாளர்களால் எந்த நேரத்திலும் ரெய்டு நடக்கலாம் என்ற பீதி ஏற்பட்டிருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நிலக்கரிக்கு பெயர் போன டவுன்ஷிப் பகுதியில் 20க்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்படுகிறதாம்.. குறிப்பாக நகர் பகுதி ரேஷன் கடைக்கு வரும் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட தரமான பொருட்களை அங்குள்ள சுரங்க அதிகாரிகள் வாங்குவதில்லையாம்..
இதை தங்களுக்கு சாதகமாக கடை விற்பனையாளர்கள் பயன்படுத்தி வருகிறார்களாம்.. தரமில்லா பொருள் வந்துள்ளதாக பொய் தகவலை பரப்பி, தேக்கமடையும் பொருட்களை நல்ல விலைக்கு கள்ளச்சந்தையில் விற்று ப விட்டமின் சேர்க்கிறார்களாம்.. லாரிகளில் லோடு வந்தாலும், கடைகளை தாமதமாக திறப்பதோடு வெகுநேரம் காத்திருக்கும் ஏழைகளிடம் அரிசி வரல… சர்க்கரை வரல… என மறைமுக இழுத்தடிப்பு நடத்தி வெளி நபர்களுக்கு விற்கிறார்களாம்.. அதுமட்டுமின்றி தங்களுக்கான குடியிருப்பையும் வாடகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்களாம்..
இதை நோட்டமிட்ட உள்ளூர்வாசிகள் பிரச்னையை பூதாகரமாக்கி இருக்கிறார்களாம்.. அதாவது சுரங்க அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் மொட்டை கடிதம் பறந்திருக்கிறதாம்.. இதனால் எந்த நேரத்திலும் ரெய்டு இருக்கலாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வனத்துறை தேர்வு ஆள் மாறாட்டத்தில் சிக்கிய 8 பேரை காப்பாற்ற போலீஸ் துடிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் சிட்டியில் வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வடமாநில வாலிபர்கள் எட்டு பேரை சிட்டி போலீஸ் கைது செய்தாங்களாம்..
முறையாக புகார் வாங்கி வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை செய்து ஆள்மாறாட்டம் செய்த எட்டு பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினாங்களாம்.. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவங்க என்பதால் விசாரணை செய்வதில் மிகவும் சவாலா இருந்ததாம்.. வழக்கு விசாரணை அதிகாரிங்க கடும் ரிஸ்க் எடுத்து தான் அந்த 8 பேரையும் கொத்தாக தூக்கி வந்தார்களாம்.. சிட்டி அதிகாரி பாராட்டுவார்ன்னு எதிர்பார்த்த நிலையில கைது விவகாரம் வெளியே தெரியாம பார்த்துக்கோங்கன்னு ஒற்றை வார்த்தையில் ஒரு ஆர்டர் போட்டுட்டாராம்..
ஆனால் கைது விஷயம் வெளியே கசிந்து பத்திரிகைக்காரங்க கோர்ட்டுக்கு போய் தயாராக இருந்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் 8 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு பத்திரிகையாளர்கள் கண்ணில் படாம பார்த்துக்கொண்டார்களாம்.. கோர்ட்டில் ஆஜர்படுத்திட்டு அவங்களை வெளியே அழைத்து வராம கோர்ட்டின் கதவு, ஜன்னல்களை எல்லாம் அடைத்து வைத்துக் கொண்டு நீண்ட நேரம் உள்ளேயே இருந்து கொண்டார்களாம்..
தப்பு செய்தவங்களை காப்பாற்ற ஏன் போலீஸ் இப்படி துடிக்கிறாங்கன்னு விசாரித்த போது, பத்திரிகையில செய்திகள் வந்தால் சிட்டியில் க்ரைம் ரேட் அதிகமாக இருக்கிற மாதிரி தோற்றம் வந்துவிடும். எனவே சிட்டியில் நடக்கிற நல்லது கெட்டது என எதுவும் வெளியே தெரியாம பார்த்துக்கோங்கன்னு தனக்கு கீழ் இருக்கிற அதிகாரிங்களுக்கு சிட்டி உயர் அதிகாரி கடுமையான உத்தரவு போட்டு இருக்கிறாராம்.. வெறும் பாராட்டையும், புகழையும் மட்டுமே விரும்புகிற ஆளாக சிட்டி உயர் அதிகாரி மாறி வருகிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post இலை தலைவரை தாஜா செய்யும் வேலையில் இறங்கியிருக்கும் தாமரை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.