இலை தலைவரின் சுற்றுப்பயண திட்ட ரகசியம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 months ago 10


‘‘இலைக்கட்சிக்குள் உள்கட்சி சண்டை பூதாகரமாகி வருதே..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் ரகசிய திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பிச்சிருக்காம். கட்சியில் இருக்கும் சீனியர்களை அவர்களுக்கே தெரியாமல் டம்மியாக்கி வெளியேற்றுவதுதான் அந்த திட்டமாம். இலைக்கட்சி என்றால் நான் தான், நான் என்றால் இலைக்கட்சிதான் என்று இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்காராம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மா.செ. கொடி கட்டிப் பறந்தால் அந்த மாவட்டத்தை ரெண்டாக உடைத்து, பெயருள்ள மா.செ.வை ஓரம் கட்டுவதுதான் அவரது பிளானாம். இப்பணியை தொடங்கி பல வருடங்கள் ஆகி விட்டதாம். கட்சிக்குள்ளே இருந்த புகைச்சல் தற்போது ஆங்காங்கே வெடிச்சிக்கிட்டு வருதாம். சென்னையில மாஜி பெண் மந்திரி ஒருவர் தனது மனவேதனைகளை எல்லாம் கொட்டினார். இவர் போலவே பல சீனியர்களின் வேதனை வெளியே வரத்தொடங்கியிருக்காம். கோபிக்காரர் கொந்தளிப்பும் இப்படித்தானாம்.

உடைந்து கிடக்கும் கட்சியை ஒருங்கிணைப்பதுடன், பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஆறு மாஜிக்களை கூட்டிக்கிட்டு இலைக்கட்சி தலைவரை சந்திச்சிருக்காரு. ஆனால் இலைக்கட்சி தலைவரோ நோ சொல்லிட்டதால மிகவும் மனசொடிந்து இருந்த நேரத்தில், மலராத கட்சியின் தலைவரான மாஜி போலீஸ்காரர், கோபிக்காரருக்கு வலைவிரிச்சதா சொல்றாங்க. அந்த வலையில விழுந்ததாக நினைத்த போலீஸ்காரர், யாரும் எதிர்பாராத வகையில் முக்கிய தலைவர் கட்சியில் இணையப்போவதாக சொல்லியிருக்காரு. இதனை தெரிஞ்சிக்கிட்ட இலைக்கட்சி தலைவர், கோபிக்காரரை செல்லவிடாமல் தடுத்த நிலையில்தான் மலராத கட்சியில் இணையும் விழா ரத்தாகி போச்சாம். அதிலிருந்தே கோபிக்காரரை கட்சியில் இருந்து ஓரம் கட்டும் வேலையை தொடங்கிவிட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க..

தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதினால்தானே தன்னை இவ்வாறு மிரட்டுகிறார்கள், அதனை முற்றிலும் பறித்து ஓரமாக இருக்க வைத்தால் என்ன செய்வார்கள் என்ற கேள்வி இலைக்கட்சி தலைவரின் நெஞ்சில் எழுந்ததாம். இதனால சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து சுற்றுப்பயணத்தை தொடங்கப்போறாராம். அவ்வாறு செல்லும் போது தனது பேச்சை கேட்பது யார், எதிராக இருப்பவர் யார் என்பதை கண்டுபிடிக்கப் போறாராம். எதிரானவர்களுக்கு எதிராக தனக்கு வேண்டியவர்களை களம் இறக்கப்போவதா ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க.. அதோடு, மம்மியை கூட சமாதானம் செஞ்சிடலாம்.. ஆனால் இலை தலைவரின் கிட்ட கூட போகமுடியாது.. போகப்போக அவர் யார் என்பது தெரியும் என அவரை நன்கு தெரிந்த கட்சிக்காரங்க சொல்லிக்கிட்டு திரியறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘தலைநகரில் இருந்து ஷிப்ட் ஆகும் பிளானில் இருக்காராமே, சமீபத்தில் சலசலப்பை ஏற்படுத்தி மாஜி பெண் மந்திரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்ட இலைக்கட்சியில் மாஜி அமைசரின் தலைமையில் ஒரு அணியும், சிட்டிங் எம்எல்ஏ தலைமையில் ஒரு அணியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இப்போது புதிதாக ஒரு ேகாஷ்டி முளைத்துள்ளதாம். தலைநகரில் இருந்து அரசியல் செய்து வந்த மாஜி பெண் அமைச்சரின் பார்வை மீண்டும் சொந்த மாவட்டத்தை நோக்கி திரும்பியுள்ளதாம். தலைநகரத்து அரசியலில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தவர், கட்சி கூட்டத்தில் தனக்கு மரியாதை கிடைப்பதில்லை என வெளிப்படையாகவே புலம்பித் தள்ளி விட்டார். இனி தன்னால் தலைநகர அரசியலில் நினைத்த இடத்தை அடைய முடியாது என்ற முடிவிற்கு வந்துள்ளாராம். ஆகவே, சொந்த மாவட்டத்துக்கே வந்து அரசியல் பண்ணலாம் என பிளான் போட்டுக் கொண்டிருக்கிறாராம்.

இதை மோப்பம் பிடித்த இரு கோஷ்டியினரும் ஒரே மாதிரியான முடிவிற்கு வந்துள்ளனராம். மாஜி பெண் அமைச்சர் சொந்த மாவட்ட அரசியலுக்கு திரும்பினால் நமக்கு எந்த எதிர்காலமும் இருக்காது என்ற முடிவிற்கு சென்றுவிட்ட இருவரும், கட்சி நிகழ்ச்சிகள், கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகள் என எதிலும் மாஜி பெண் அமைச்சரின் பெயர் மருந்திற்கு கூட இருக்கக் கூடாது என தங்களது ஆதரவாளர்களிடம் மிகவும் கறாராக கூறிவிட்டனராம். ஏற்கனவே இருக்கும் இரண்டு கோஷ்டிகளால் திணறி வரும் கட்சியினர், மாஜி பெண் அமைச்சருக்காக மூன்றாவது கோஷ்டி உருவாகி வருவதை நினைத்து மிகுந்த விரக்திக்கு சென்றுவிட்டனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்துக்காரர் டீமின் கண்காணிப்பு வளையத்தில் டெல்டா மாவட்ட முக்கிய நிர்வாகிகள் இருப்பதாக சேதி வருதே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் தேனிக்காரர், சின்னமம்மியை சேர்க்க வேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருந்தனர். இதனால் கட்சியில் திரைமறைவில் இருந்து வந்த உட்கட்சி மோதல் உச்சகட்டம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம்…நெற்களஞ்சியம் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் உள்ள இலை கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள தலைமை முடிவு செய்துள்ளதாம்… இதற்காக டெல்டாவில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சேலத்துக்காரர் டீம் தங்களது கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களது நடவடிக்கைகள் குறித்தும், திரைமறைவில் ஏதேனும் வேலை நடக்கிறதா? என்பதையும் ரகசியமாக கண்காணித்து வருகிறதாம்…இந்த தகவல் தெரிய வந்த முக்கிய நிர்வாகிகளும் ‘கப்சிப்’ என இருந்து வருவதால் டெல்டா மாவட்டத்தில் கட்சிக்குள்ளே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை தலைவரின் சுற்றுப்பயண திட்ட ரகசியம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article