இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் மாற்றுக்கட்சிக்கு தாவ தயாராகிக் கொண்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 weeks ago 5

‘‘ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை பாயப் போகிறதாமே’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் தாமரை கட்சியை சேர்ந்த ஊராட்சி தலைவராக இருப்பவர் ஊராட்சிக்கு ரூ.4 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தணிக்கையில் கண்டறிந்துள்ளார்களாம். ஏற்கனவே முறைகேடுகள் தொடர்பாக தலைவரின் ‘செக்’ பவரை முடக்கிய நிலையில் கடைசி ஆறு மாத காலத்தில் இவ்வாறு முடக்க கூடாது என்ற விதியை பயன்படுத்தி அதில் இருந்து விலக்கு பெற்றுவிட்டார்களாம்.

ஆனால் இப்படி முறைகேடு நடக்கிறது என்று தொடர்ச்சியாக அனைத்து கட்சிகளும் போராடிவந்தபோதும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தார்களாம். இப்போது ஒட்டுமொத்த முறைகேடும் அம்பலப்பட்டு நிற்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளார்களாம். இதில் தலைவர் மட்டுமின்றி துறை சார்ந்த சில அலுவலர்கள் மீதும் நடவடிக்கை பாயலாம் என்கின்றனர். ஊராட்சிகளின் பதவிக் காலம் டிசம்பருடன் முடிய உள்ள நிலையில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள், எப்போது எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அந்த பகுதி மக்களிடம் மிகுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘விவசாயின்னு சொல்லி மண்ணை, வணிகத்துக்கு எடுக்குறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஏரி, குளம், கண்மாய்களில் தண்ணீர் இல்லாத நேரங்களில் அதில் உள்ள களிமண், வண்டல் மண் ஆகியவை விவசாய பயன்பாட்டிற்காகவும், மண்பாண்டம் செய்யவும் வழங்கப்படுது. அதேபோல் குயின் பேட்டை மாவட்டத்துல ஆறு காடான தாலுகாவுல விவசாயத்துக்கு மண் எடுக்க வழங்குறாங்க. சமீபத்துல ராமாயணத்துல தம்பிகளில் முதலாவது பெயரை கொண்ட ஒரு ஊர் ஆட்சியில், விவசாயத்துக்கு மண்எடுக்குறதாக சொல்லிவிட்டு, வணிக ரீதியாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்திருக்குது.

ஆதாரப்பூர்வமாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால, உடனே மண் எடுக்க தடையும் போட்டிருக்காங்க. ஆனால், சமீப காலமாக இதுபோன்று அனுமதி இல்லாமல் ஏரிகளில் மண் எடுத்து வணிக ரீதியாக பயன்படுத்துற நிலை தொடருதாம். இதற்கு அதிகாரிகள் சிலரது ஆசி தான் காரணமாம். தட்டிக்கேட்குற பொதுமக்களையும் மிரட்டுறாங்களாம். இதனால ஆறு காடான தாலுகாவுல கனிமகொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்னு விவசாயிகள் மத்தியில இருந்து கோரிக்கை குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘களமிறங்கிய அமைச்சர்களால் வெள்ள பாதிப்பு குறைந்து இயல்பு நிலை வந்துவிட்டதா சொல்றாங்களே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. தூங்கா நகரில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து, சாலைகளை மூழ்கடித்து பெரும் பாதிப்பைத் தந்தது. அரசின் தீவிர முயற்சியில் மாவட்ட, மாநகராட்சியினருடன் 3 அமைச்சர்கள் களமிறங்கி பணியாற்றியதையடுத்து, மொத்த நகரமும் இயல்புக்கு திரும்பியது.

இந்த ஆய்வின்போது, களத்திலிருந்த உள்ளூர் திமுக அமைச்சரும், மாஜியான தெர்மாகோலும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். அமைச்சரைப் பார்த்ததும், கண்மாயை ஒட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சரிசெய்திடும்படி தெர்மாகோல் தெரிவிக்க, ‘அண்ணே நீங்க சொல்றதையே செஞ்சிடுவோம்ணே..’ என்று ஆமோதித்து அனுப்பி வைத்தார் அமைச்சர். ஆய்வுப்பணிக்கென தலைநகரிலிருந்து வந்திருந்த அமைச்சரிடமும், தெர்மாகோல் விடுத்த வேண்டுகோளை தெரிவித்திருக்கிறார்.

அவரும் ஆமோதிக்க, அதற்கென உத்தரவிடப்பட்டது. எதிர்கட்சியாக இருந்தாலும், அவர்களின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு, உடனடியாக நடவடிக்ைக எடுத்த இந்தச் செயல் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கூடவே, இதை வைத்து ஒரு அரசியல் செய்யலாம் என்று நினைத்த அண்ணனின் திட்டம் தவிடுபொடியாகி விட்டதே என்று இலைக்கட்சியினர் பேசிக் கொள்வதையும் கேட்க முடிந்தது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மன்னர் மாவட்டத்தில் இலை கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு தாவ முடிவாமே’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இந்த மாவட்டத்தில் நகர் பகுதியில் இலை கட்சி நிர்வாகிகள் சோகத்தில் இருந்து வருகிறார்களாம்….கடந்த சட்டமன்ற தேர்தலில் இலை கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த மன்னர் வாரிசுகாரர் எங்கே இருக்கிறார் என்றே கட்சிகாரங்களுக்கே தெரியவில்லையாம்… கட்சிகாரங்க வீட்டில் நடைபெறக்கூடிய நல்லது கெட்டதுக்கு கூட மன்னர் வாரிசுதாரர் வருவதில்லை.

அவருடன் நெருக்கமாக இருந்த மாஜி நகர்மன்ற தலைவரும் கூட தேனிக்காரர் அணிக்கு சென்றுவிட்டார். இதனால் அவரை நம்பி இருந்த தொண்டர்கள், நிர்வாகிகள் கூட என்ன செய்வது என்று புலம்பி வருகின்றனர். இலை கட்சி ஆளும் கட்சியாக இருந்தபோது நகரப்பகுதிக்குள்ளே சுற்றி திரிந்த முக்கிய நிர்வாகிகள் கூட நகர பகுதிக்குள் தற்போது காணவில்லை. இதனால் இலை கட்சியில் உள்ள முதல் கட்ட, 2வது கட்ட நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு செல்ல முடிவு செய்து அதற்கான திரைமறைவான வேலையில் இறங்கியுள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் மாற்றுக்கட்சிக்கு தாவ தயாராகிக் கொண்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article