விருதுநகர், ஜன.21: மலை புறம்போக்கு என்பதை நத்தம் குடியிருப்பு பகுதியாக மாற்றி பட்டா வழங்க கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சேத்தூர் மேட்டுப்பட்டி மக்கள் மனு அளித்தனர். மனுவில், சேத்தூர் துணைமின்நிலையம் எதிரில் கல்உடைக்கும் தொழிலாளர்களின் வாரிசுகள் 19 பேருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பட்டா கோரி கடந்த 2023, 2024ல் மனு அளித்துள்ளோம். விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அதிகாரிகளும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
எங்களது நிலம் கிராம நிர்வாக கணக்கில் மலைப்புறம்போக்கு என இருப்பதை நத்தம் குடியிருப்பு பகுதி என வகைப்பாடு மாற்றம் செய்து வறுமை கோட்டிற்கு கீழ் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். இதேபோல் சிவகாசி பூவநாதபுரம் இந்திரா காலனி மக்கள் அளித்த மனுவில், பட்டியலின அருந்தியர் சமூகத்தை சேர்ந்த 108க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதில் 48 குடும்பங்களுக்கு வீடு இல்லை. இலவச வீட்டுமனை பட்டா கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. 48 குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச பட்டா வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
The post இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும்: கல் உடைக்கும் தொழிலாளர்கள் மனு appeared first on Dinakaran.