கொழும்பு
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக இலங்கையிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக இலங்கையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கிழக்கு கடலோர மாகாண பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் 15 பேர் பலியாகி இருந்தனர். பலர் மாயமாகினர்.
இந்தநிலையில் இலங்கையில் கனமழைக்கு பலியாகி மாயமான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பலர் மாயமாகியுள்ள நிலையில் மீட்புப்பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.