
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், ஆறுமுகநேரி பகுதிக்கு உட்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு வடபுறம் உள்ள கோட்டைமலை காட்டுப்பகுதியில் கொம்புத்துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலையில் ரோந்து பணிக்கு சென்றனர்.
அப்போது அங்கே இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு மினி லாரியில் கொண்டுவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 68 மூட்டைகளில் பீடி இலைகள் (சுமார் 2,250 கிலோ) கைப்பற்றப்பட்டுள்ளது. பீடி இலைகள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு பீடி இலைகள் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் கைப்பற்றபட்ட பீடி இலைகள் மற்றும் வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 60 லட்சம் ஆகும்.