மீனம்பாக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தின் ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 15 மீனவர்கள் நேற்றிரவு கொழும்பிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்திறங்கினர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி, நவம்பர் 11ம் தேதிகளில் 2 படகுகள் மூலமாக 15 மீனவர்களும் நடுக்கடலுக்கு சென்று, அதிகாலை நேரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.
பின்னர், எல்லை தாண்டி வந்து மீன்பிடி பிடித்ததாக 15 தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்கு 15 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்து, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்களையும் சென்னைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டனர்.
அவர்களுக்கு எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி, அனைவருக்கும் சென்னை செல்வதற்கான விமான டிக்கெட்டுகளுக்கும் ஏற்பாடு செய்தனர். இதைத் தொடர்ந்து, இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்றிரவு ஏர்இந்தியா விமானம் மூலமாக, இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்களும் சென்னை விமானநிலையத்துக்கு வந்திறங்கினர். சென்னை விமானநிலையம் வந்திறங்கிய 15 தமிழக மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில், ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 15 மீனவர்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் சென்னை வருகை appeared first on Dinakaran.