இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் சென்னை வந்தனர்: அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்

13 hours ago 2


மீனம்பாக்கம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர், கடந்த பிப்ரவரி 23ம் தேதி, விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடலோர காவல் படை ரோந்து கப்பல் வந்தது. அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து 25 பேரையும் கைது செய்தது. மேலும் மீனவர்களின் விசைப்படகு, மீன்பிடி வலைகள், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, இலங்கைக்கு அழைத்து சென்று, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், 25 மீனவர்களையும் விடுவிக்க கோரி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அவசர கடிதம் எழுதினார்.

உடனே இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை சிறையில் இருந்து 25 பேரையும் மீட்டனர். அவர்களை தங்களது பராமரிப்பில் வைத்து கொண்டு, பாஸ்போர்ட் இல்லாததால் அவசரகால சான்றிதழை தூதரக அதிகாரி வழங்கினார். அதோடு 25 மீனவர்களுக்கும், விமான டிக்கெட்டுகளை தூதரக அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர். பின்னர் நேற்றிரவு இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் 25 பேரையும் அனுப்பி வைத்தனர். அவர்கள் சென்னை வந்ததும், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

The post இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் சென்னை வந்தனர்: அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article