
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு கடந்த 2016-ல் கட்டுமான பணிகளை தொடங்கினர்.
திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கூடம், நடிப்பு பயிற்சி மையம் போன்றவை கட்டப்பட்டு வந்தன. 60 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் 2019-ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் வழக்கு சர்ச்சைகளால் கட்டுமான பணிகள் முடங்கின.
வழக்குகள் முடிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றதும் மீண்டும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட முயற்சி எடுத்தனர். ஆனாலும் நிதி இல்லாததால் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வங்கியில் கடன் கேட்டனர். நடிகர்-நடிகைகளும் நிதி வழங்கினார்கள்.
போதுமான நிதி கிடைத்தநிலையில் சமீபத்தில் நடிகர் சங்க கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், இக்கட்டிட பணி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த பணிகளை விஷால், கார்த்தி இருவரும் நேரில் பார்வையிட்டனர். மேலும், விநாயகர் கோவிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.