புதுடெல்லி: ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களுக்குள் உள்ள அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஐபிஎல் தொடரின் 56வது போட்டி நடப்பதற்கு முன் நிலவரப்படி, பட்டியலில் முதல் ஏழு இடங்களில் முறையே, பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத், டெல்லி, கொல்கத்தா, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.
இவற்றுக்கு கீழ் உள்ள சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், சென்னை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இழந்து விட்டன. தற்போதைய சூழலில், பிளே ஆப் கனவில் உள்ள, பட்டியலில் முதல் 7 இடங்களில் கீழ் உள்ள அணிகள் அதிகபட்சம், 18 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.
புள்ளிப் பட்டியலில் மேல் உள்ள 7 அணிகளில், பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு யாருக்கு என்பதை பற்றிய ஒரு அலசல்
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: இந்த அணி 11 போட்டிகளில் ஆடி 16 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட்: 0.482. பெங்களூரு அணி, லக்னோ, சன்ரைசர்ஸ், கொல்கத்தா ஆகிய 3 அணிகளுடன் மோத வேண்டி உள்ளது. பெங்களூரு, இன்னும் ஒரு போட்டியில் வென்றால் போதும், பிளே ஆப் சுற்றில் நுழைந்து விடலாம்.
2. பஞ்சாப் கிங்ஸ்: இந்த அணி 11 போட்டிகளில் ஆடி 15 புள்ளிகள் பெற்றுள்ளது. நெட் ரன் ரேட், 0.376. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் ஆகிய 3 அணிகளுடன் பஞ்சாப் ஆட வேண்டி உள்ளது. பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய, பஞ்சாப் அணி குறைந்தது 2 போட்டிகளில் வென்றாக வேண்டும். 3 போட்டிகளிலும் வென்றால், முதல் இரு இடங்களில் ஒன்றை பஞ்சாப் பிடிக்கலாம். பஞ்சாப் மோதவுள்ள 3 அணிகளில் இரு அணிகள், டாப் 2ல் உள்ளவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
3. மும்பை இந்தியன்ஸ்: இந்த அணி, 11 போட்டிகளில் ஆடி 14 புள்ளிகள் பெற்றுள்ளது. நெட் ரன் ரேட்: 1.274. குஜராத், பஞ்சாப், டெல்லி ஆகிய 3 அணிகளுடன் மும்பை மோத வேண்டி உள்ளது. தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வென்று சிறந்த பார்மில் மும்பை உள்ளது. தவிர, ரன் ரேட் மிக சாதகமான அம்சமாக உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் 2ல் வென்றால் பிளே ஆப் நிச்சயம். 3ல் வென்றால், டாப் 2ல் இடம் கிடைக்கும்.
4. குஜராத் டைடன்ஸ்: இந்த அணி 10 போட்டிகளில் ஆடி, 14 புள்ளிகள் பெற்றுள்ளது. நெட் ரன் ரேட்: 0.867. மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை ஆகிய 4 அணிகளுடன் குஜராத் ஆட வேண்டி உள்ளது. குஜராத் அணி, மும்பைக்கு அடுத்தபடியாக சிறப்பான ரன் ரேட்டை பெற்றுள்ளது சாதகமான அம்சம். மற்ற அணிகளை ஒப்பிடுகையில், குஜராத்துக்கு ஒரு போட்டி கூடுதலாக கையில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் 2ல் வென்றால் பிளே ஆப்பை உறுதி செய்யலாம். குஜராத், கடைசி இரு போட்டிகளை உள்ளூரில் ஆடும் வாய்ப்பு உள்ளது கூடுதல் சிறப்பு.
5 டெல்லி கேபிடல்ஸ்: இந்த அணி, 11 போட்டிகளில் ஆடி 13 புள்ளிகள் பெற்றுள்ளது. நெட் ரன் ரேட்: 0.362. பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய 3 அணிகளுடன் குஜராத் மோத வேண்டி உள்ளது. சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில் தோற்கும் சூழல் இருந்தபோதும் போட்டி கைவிடப்பட்டதால், ஒரு புள்ளியை டெல்லி பெற்றது. இந்த அணி இனி வரும் போட்டிகளில் 2ல் வென்றால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து பிளே ஆப் சுற்றுக்கு காத்திருக்க வேண்டும். 3ல் வென்றால், பிளே ஆப்புக்குள் நுழையலாம்.
6 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இந்த அணி 11 போட்டிகளில் ஆடி 11 புள்ளிகள் பெற்றுள்ளது. நெட் ரன் ரேட்: 0.249. சென்னை, சன்ரைசர்ஸ், பெங்களூரு அணிகளுடன் இன்னும் மோத வேண்டி உள்ளது. இவை அனைத்திலும் வென்றால் பிளே ஆப் வாய்ப்பு இருக்கும். இல்லாவிடில், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளுக்காக காத்திருக்க வேண்டும்.
7 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: இந்த அணி, 11 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. நெட் ரன் ரேட்: மைனஸ் 0.469. பெங்களூரு, குஜராத், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுடன் இன்னும் ஆட வேண்டி உள்ளது. டாப் 7 அணிகளில், மைனசில் ரன் ரேட் வைத்துள்ள ஒரே அணி இது. கடைசி 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளுக்காகவும் லக்னோ காத்திருக்க வேண்டும்.
The post இறுதிக் கட்டத்தை நெருங்கும் ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் நுழைவது யார்? டாப் 7 அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு appeared first on Dinakaran.